முன்னாள் மந்திரி வினய் குல்கர்னி ஜாமீனில் விடுதலை ஆனார்

பா.ஜனதா பிரமுகர் கொலை வழக்கில் சிறையில் இருந்த முன்னாள் மந்திரி வினய் குல்கர்னி பெலகாவி இண்டல்கா சிறையில் இருந்து நேற்று ஜாமீனில் விடுதலை ஆனார். அவரை அவரது ஆதரவாளர்கள் திறந்த காரில் ஊர்வலமாக அழைத்து வந்தனர்.;

Update: 2021-08-21 22:17 GMT
பெங்களூரு:

யோகேஷ் கவுடா கொலை வழக்கு

  தார்வார் மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினராக இருந்தவர் யோகேஷ் கவுடா. இவர் பா.ஜனதாவைச் சேர்ந்தவர் ஆவார். கடந்த 2016-ம் ஆண்டு இவர் படுகொலை செய்யப்பட்டார். யோகேஷ் கவுடா தனக்கு சொந்தமான உடற்பயிற்சி கூடத்தில் இருந்தபோது அங்கு வந்த மர்ம கும்பல் அவரை அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் தாக்கி படுகொலை செய்தது. இச்சம்பவம் குறித்து முதலில் உப்பள்ளி உபநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். பின்னர் இவ்வழக்கு சி.பி.ஐ. வசம் ஒப்படைக்கப்பட்டது.

  அதன்பேரில் இவ்வழக்கு குறித்து சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரித்து வந்தனர். மேலும் இக்கொலை வழக்கில் முன்னாள் மந்திரியான காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த வினய் குல்கர்னிக்கு தொடர்பு இருப்பதாக சி.பி.ஐ. அதிகாரிகள் கருதினர். அதனால் அவரை கடந்த ஆண்டு(2020) நவம்பர் மாதம் 5-ந் தேதி சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்தனர். பாதுகாப்பு காரணங்களுக்காக அவரை தார்வார் சிறையில் அடைக்காமல் பெலகாவி மாவட்டத்தில் உள்ள இண்டல்கா சிறையில் அடைத்தனர்.

சாட்சிகளை கலைத்ததாக...

  இந்த நிலையில் வினய் குல்கர்னி தனக்கு ஜாமீன் கோரி தார்வார் கோர்ட்டு, பெங்களூருவில் உள்ள மக்கள் பிரதிநிதிகள் கோர்ட்டு, கர்நாடக ஐகோர்ட்டு ஆகியவற்றில் மனுத்தாக்கல் செய்தார். அவரின் மனுக்களை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். அதைத்தொடர்ந்து அவர் தனக்கு ஜாமீன் கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார். அதன்பேரில் அவருக்கு சுப்ரீம் கோர்ட்டு கடந்த சில நாட்களுக்கு முன்பு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

  இதற்கிடையே சாட்சிகளை கலைத்ததாக பெங்களூருவில் உள்ள மக்கள் பிரதிநிதிகள் கோர்ட்டில் தொடரப்பட்டிருந்த வழக்கிலும் வினய் குல்கர்னிக்கு ஜாமீன் கிடைத்தது.

விடுதலை ஆவதில் தாமதம்

  ஆனால் நேற்றுமுன்தினம் வரமகாலட்சுமி பண்டிகையையொட்டி அரசு விடுமுறை என்பதால் வினய் குல்கர்னி விடுதலை ஆவதில் தாமதம் ஏற்பட்டது. இந்த நிலையில் அனைத்து விதமான விதிமுறைகளும் நேற்று முறைப்படி முடிவடைந்து வினய் குல்கர்னி பெலகாவி இண்டல்கா சிறையில் இருந்து ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். அவர் 9 மாதங்களுக்கு பிறகு விடுதலை ஆவது குறிப்பிடத்தக்கது. சிறையில் இருந்து வெளியே வந்த வினய் குல்கர்னி அங்கு திரண்டிருந்த நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

  நான் குற்றமற்றவன். விரைவில் விடுதலை ஆவேன் என்று முன்பு கூறியிருந்தேன். அதன்படி தற்போது ஜாமீனில் வெளிவந்துள்ளேன். விரைவில் இவ்வழக்கில் இருந்தும் விடுதலை ஆவேன். நான் நிரபராதி என்பதை கோர்ட்டில் நிரூபிப்பேன். கோர்ட்டு மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. இந்த போராட்டத்தில் இருந்து விரைவில் வெளிவருவேன். நான் சாதாரண விவசாய குடும்பத்தில் இருந்து வந்து இந்த அளவிற்கு உயர்ந்துள்ளேன். என் தொகுதி மக்கள் என் மீது பாசமும், நம்பிக்கையும் வைத்துள்ளனர். நான் 9 மாதங்கள் 16 நாட்களை சிறையில் கழித்திருக்கிறேன்.

பெங்களூருவுக்கு புறப்பட்டார்

  என் வாழ்க்கையில் இது எனக்கு ஒரு பாடம். நான் இதுவரையில் பொதுபோக்கு இல்லாமல் ஓடிக்கொண்டே இருந்தேன். தற்போது எனக்கு 9 மாதங்கள் ஓய்வு கிடைத்துள்ளது. சிறையில் இருந்து நான் பல விஷயங்களை கற்றுக் கொண்டேன்.
  இவ்வாறு அவர் கூறினார்.

  அதையடுத்து அவர் திறந்த காரில் ஏறி ஊர்வலமாக புறப்பட்டார். அவரை அவரது ஆதரவாளர்கள் ஊர்வலமாக அழைத்துச் சென்றனர். அப்போது அவரை வாழ்த்தி கோஷமிட்டனர். மேலும் பூக்கள் தூவியும், மாலைகள் அணிவித்தும் ஆரவாரம் செய்தனர். பின்னர் அவர் பெலகாவி சிவபசவா நகரில் உள்ள நாகனூரு ருத்ராக்‌ஷி மடத்திற்கு சென்று மடாதிபதி அல்லமபிரபுவிடம் ஆசி பெற்றார். பின்னர் சாம்ப்ரா விமான நிலையத்தில் இருந்து மதியம் 3.40 மணிக்கு விமானம் மூலம் பெங்களூருவுக்கு புறப்பட்டு சென்றார்.

மேலும் செய்திகள்