மனைவியை கொன்று உடலை வாழை தோட்டத்தில் புதைத்த விவசாயி
மண்டியா தாலுகாவில், மனைவியை கொன்று உடலை வாழை தோட்டத்தில் புதைத்துவிட்டு தலைமறைவான விவசாயியை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.
மண்டியா:
விவசாயி
மண்டியா (மாவட்டம்) தாலுகா அருதேஷ்வரனஹள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் சிவராஜா. விவசாயி. இவரது மனைவி ராணி. இவர்கள் இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் மீண்டும் கணவன், மனைவி இடையே குடும்பத்தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரம் அடைந்த சிவராஜா, தனது மனைவி ராணியை சரமாரியாக தாக்கினார். இதில் ராணி நிலைகுலைந்து மயங்கி விழுந்தார்.
பின்னர் வீட்டில் கிடந்த கத்தியை எடுத்து சிவராஜா, ராணியை சரமாரியாக குத்தினார். இதில் படுகாயம் அடைந்த ராணி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இதையடுத்து சிவராஜா, ராணியின் உடலை வீட்டின் பின்புறம் உள்ள வாழை தோட்டத்தில் குழிதோண்டி புதைத்துவிட்டு தப்பி ஓடிவிட்டார்.
பரபரப்பு
இதுபற்றி அறிந்த தோட்ட உரிமையாளர் சதீஷ், மண்டியா புறநகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, தாசில்தார் முன்னிலையில் ராணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மாவட்ட அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய சிவராஜாவை வலைவீசி தேடிவருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.