நாகர்கோவிலில் பூங்கா 3 நாட்கள் மூடல்
ஓணம் பண்டிகையையொட்டி கூட்டம் கூடுவதை தவிர்க்க நாகர்கோவிலில் பூங்காவை 3 நாட்கள் மூடி, மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது.
நாகர்கோவில்,
ஓணம் பண்டிகையையொட்டி கூட்டம் கூடுவதை தவிர்க்க நாகர்கோவிலில் பூங்காவை 3 நாட்கள் மூடி, மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது.
மாநகராட்சி பூங்கா
நாகர்கோவில் வேப்பமூட்டில் மாநகராட்சிக்கு சொந்தமான சர் சி.பி.ராமசாமி பூங்கா உள்ளது. இங்கு நுழைவுக்கட்டணமாக சிறுவர்களுக்கு ரூ.5-ம், பெரியவர்களுக்கு ரூ.10-ம் வசூலிக்கப்படுகிறது. இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களை நிறுத்துவதற்கும் தனியாக கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
கொரோனா பரவல் காரணமாக மாநகராட்சி பூங்காவுக்குள் பொதுமக்கள் அனுமதிக்கப்படவில்லை. கொரோனா தொற்று குறையத் தொடங்கியதாலும், அரசு ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை அறிவித்ததாலும் பூங்கா மீண்டும் திறக்கப்பட்டு பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டனர்.
இதையடுத்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மக்கள் பூங்காவுக்கு வந்து பொழுதை கழித்து சென்றனர். அதிலும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பூங்காவில் கூட்டம் அதிகமாக இருந்து வந்தது.
3 நாட்கள் மூடல்
இந்தநிலையில் ஓணம் பண்டிகை காரணமாக மாநகராட்சி பூங்காவுக்கு மக்கள் அதிகமாக வரவாய்ப்புள்ளது என அதிகாரிகள் மூலம் கலெக்டருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து மாநகராட்சி பூங்காவை நேற்று முன்தினம் முதல் இன்று (ஞாயிற்றுக்கிழமை) வரை 3 நாட்கள் பூங்காவை மூட மாநகராட்சி ஆணையருக்கு, கலெக்டர் உத்தரவிட்டார். இதையடுத்து நேற்று முன்தினம் முதல் பூங்கா மூடப்பட்டது. ஓணம் பண்டிகையான நேற்று பூங்கா மூடப்பட்டதை அறியாத பொதுமக்கள் ஏராளமானோர் வந்தனர். பூங்கா திறக்கப்படாததால் அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். பூங்கா மூடப்பட்டது குறித்து எந்த ஒரு அறிவிப்பு பலகையும் வைக்கப்படவில்லை.
கலெக்டர் உத்தரவு
இது குறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, ஓணம் பண்டிகையையொட்டி பூங்காவுக்கு அதிக அளவில் மக்கள் வருவார்கள் என்பதாலும், கொரோனாவை கட்டுப்படுத்தும் விதமாகவும் மாநகராட்சி பூங்கா வெள்ளிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை மூடப்பட்டுள்ளது. அடுத்த வாரமும் இதேபோல் மூடப்படுமா? என்பது கலெக்டரின் உத்தரவைப் பொறுத்து முடிவு செய்யப்படும், என்றனர்.