பொன்னமராவதியில் கலைமாமணி விருது பெற்ற கரகாட்ட கலைஞர் குடும்பம் வறுமையில் வாடும் சோகம் அரசு உதவி செய்ய கலை ஆர்வலர்கள் கோரிக்கை

பொன்னமராவதியில் வறுமையில் வாடும் கலைமாமணி விருது பெற்ற கரகாட்ட கலைஞர் குடும்பத்தினருக்கு தமிழக அரசு உதவ வேண்டும் என கிராமிய கலை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2021-08-21 19:11 GMT
பொன்னமராவதி:
கரகாட்ட கலைஞர் கல்யாணி 
புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதியில் மலையாண் ஊரணிக்கரை கிழக்குப்பகுதியில் வசித்து வருபவர் கரகாட்ட கலைஞர் கல்யாணி (வயது 72). உலகப்புகழ் பெற்ற இவர், கடந்த 1959-ல் ஏழு கரகம் வைத்து ஆடி புகழ்பெற்றவர். டெல்லி, கல்கத்தா மற்றும் பீகார் போன்ற மேற்கு வங்க மாநிலங்களுக்கு சென்று கரக நிகழ்ச்சிகள் நடத்தினார். தென்னக பண்பாட்டு மையம் வாயிலாக நாக்பூர் மையத்தின் மூலம் பல்வேறு இடங்களில் கலைநிகழ்ச்சி நடத்தி வந்தார். 1986-ல் சங்கீத நாடக அகாடமியின் டெல்லியில் நிகழ்ச்சி நடத்திய பெருமைக்குரியவர். 
தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் பல்வேறு கிராமங்களிலும் பல ஆயிரக்கணக்கான நிகழ்ச்சிகள் நடத்தி இதுவரை 26 தங்கப்பதக்கங்கள் பெற்று புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பகுதிக்கு பெருமை சேர்த்தார். 1984-ம் ஆண்டு மறைந்த தமிழக முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆரால் கலைமாமணி விருது கல்யாணிக்கு வழங்கப்பட்டது. 
பல்வேறு விருதுகள் 
இதேபோல் கல்யாணி மற்றும் அவரது மகள்கள் கலைமாமணி விசித்திரா (47), கலைவளர்மணி ஜெகதாம்பாள் (43) ஆகியோர் கரகாட்ட கல்யாணியை போல் பல்வேறு மாநிலங்களுக்கு சென்று கரகாட்ட கலையை உலகறிய செய்துள்ளனர். விசித்திராவிற்கு கடந்த 2004-ம் ஆண்டு மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவால் கலைமாமணி விருதும், ஜெகதாம்பாளுக்கு 2005-ம் ஆண்டு தமிழக அரசு கலைவளர்மணி விருதும் வழங்கப்பட்டது. இதில் கல்யாணிக்கு 1996-ம் ஆண்டு கலைச்செல்வம் விருது மறைந்த தமிழக முதல்-அமைச்சர் கருணாநிதியால் வழங்கப்பட்டது. 
மதுரை சங்கீத சக்கரவர்த்தி நாடக மேதை சோமு, எம்.எம். மாரியப்பா, நாடக நடிகர் மற்றும் சினிமா நடிகர் உடையப்பா ஆகியோர் கரக சக்கரவர்த்தி விருது வழங்கினர். மேலும் முத்தமிழ் கலைஞர் விருது, நல்லாசிரியர் விருது, சாதனைப்பெண் விருது போன்ற விருதுகளை கல்யாணி பெற்றுள்ளார். 
பொற்கிழி
தமிழ்நாடு அரசு வழங்கிய 2019-20-ம் ஆண்டிற்கான வறிய நிலையில் வாழும் மூத்த கலைமாமணி விருதாளர்களுக்கு வழங்கப்பட்டதில் கரகாட்ட கல்யாணிக்கு பொற்கிழியும், பணமுடிப்பு ரூ.50 ஆயிரமும் வழங்கப்பட்டது. 
இத்தகைய பல்வேறு விருதுகளுக்கும், பாராட்டுக்களுக்கும் பெருமை சேர்த்த உலகப்புகழ் பெற்ற கரகக்கலைஞர்களின் வாழ்க்கை இன்று கேள்விக்குறியாய் நிற்கின்றது. 
திருமணம் ஆகாத மகள்களுடன் 
தனது 7 வயதில் ஆடத்தொடங்கி இன்று 72-வது வயதில் சுமார் 60 ஆண்டு காலமாக நேர்மையான முறையில் கலைக்காக உழைத்தவர்கள் கடந்த 8 ஆண்டுகளாக மிகுந்த வறுமை நிலையில் வாழ்கின்றனர். கரகாட்ட கல்யாணி தடுமாறி விழுந்ததால் தற்போது நடக்கக்கூட முடியாமல் மிகுந்த சிரமங்களை சந்தித்து மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொண்டு வீட்டிலேயே ஓய்வு எடுத்து வருகிறார். குடும்ப வறுமையின் காரணமாக தன் 2 மகள்களுக்கும் இன்னும் திருமணம் ஆகாமல் கலைக்காக தங்களை அற்பணித்து வாழ்ந்து வருகின்றனர். 
 மேலும் தன் தாய் கல்யாணியை கண்கலங்காமல் பாதுகாத்து வருவதாகவும் அவர்களது மகள்கள் கூறியுள்ளனர். அடுத்தவேலை உணவுக்காக பிழைக்க வேண்டும் என்பதை எண்ணி தன்னுடைய சொந்த வீட்டை விற்கும் சூழலுக்கு சென்று வீட்டை அடமானம் வைத்து சாப்பிடும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இவர்களின் இந்த நிலையை தமிழக அரசு கண்டுகொண்டு இவர்களுக்கு தேவையான உதவியும், கலைப்பண்பாட்டு துறையின் வாயிலாக அரசு வேலையும் வழங்க வேண்டும் என்று பல சமூக அமைப்பை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அரசு கண்டு கொள்ளுமா?
கரக கலையை வளர்த்த பெருமை மிக்க உலகப்புகழ்பெற்ற கரகாட்ட கலைஞர் கல்யாணி, தான் பெற்ற பரிசுகள், கேடயங்கள், பதக்கங்களையும் நாள்தோறும் பார்த்து, பார்த்து அதன் அருகில் அமர்ந்து நினைத்து கண்கலங்கி வரும் சூழ்நிலையில் உள்ளார். இந்த கரகக் கலைஞர்களின் இந்த சோக நிலை மிகுந்த மன வேதனையில் உள்ளது. அவர்களுக்கு தமிழக அரசு உதவ வேண்டு்ம் என கிராமிய கலை ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். 

மேலும் செய்திகள்