பெல்ட்டால் கழுத்தை இறுக்கி பெண் போலீஸ் கொலை
பெல்ட்டால் கழுத்தை இறுக்கி பெண் போலீஸ் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அவருடைய கணவர் கைது செய்யப்பட்டார்.
விருதுநகர்,
பெல்ட்டால் கழுத்தை இறுக்கி பெண் போலீஸ் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அவருடைய கணவர் கைது செய்யப்பட்டார்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
பெண் போலீஸ்
விருதுநகர் அருகே உள்ள ஒண்டிப்புலி நாயக்கனூரைச் சேர்ந்தவர் பானுப்பிரியா (வயது 31). இவர் விருதுநகர் மேற்கு போலீஸ் நிலையத்தில் முதல்நிலை போலீசாக பணியாற்றி வந்தார். இவருடைய கணவர் விக்னேஷ் (31). இவர் ராமநாதபுரம் மாவட்டம் பாம்பூரைச் சேர்ந்தவர்.
இவர் மதுரை கப்பலூர் சிப்காட் போக்குவரத்துக்கழக பணிமனையில் கண்டக்டராக பணியாற்றி வந்தார். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு இவர்களுக்கு திருமணம் நடந்தது. மணிஷ் பாண்டியன் (4), தேவரீஷ் பாண்டியன் (2) ஆகிய இரு ஆண் குழந்தைகள் உள்ளனர்.
வாடகை வீடு
மூத்த குழந்தை மணிஷ்பாண்டியன் பாம்பூரில் தனது பாட்டி வீட்டில் உள்ளான். பானுப்பிரியா தனது கணவருடன் ஆயுதப்படை போலீஸ் குடியிருப்பில் வசித்து வந்தார்.
கடந்த 2 வாரங்களுக்கு முன்பு விருதுநகர்-சாத்தூர் ரோட்டில் நூற்பு மில்லுக்கு எதிரே உள்ள குடியிருப்பு பகுதியில் வாடகை வீட்டிற்கு மாறியுள்ளனர்.
இவரது வீட்டிற்கு அருகே பானுப்பிரியாவின் மூத்த சகோதரி கற்பகமும் வசித்து வருகிறார். கற்பகத்தின் கணவர் பாண்டி சூலக்கரை போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் பானுப்பிரியா ஒண்டிப்புலி நாயக்கனூரில் ஒரு விழாவுக்கு சென்றிருந்தபோது அந்த ஊரை சேர்ந்த தனது உறவினர் கலைச்செல்வி (29) என்பவரிடம் தனது கணவர் ஊரில் இல்லை என்றும், தனது 2 வயது மகனுக்கு உடல்நிலை சரியில்லை என்றும் கூறியதுடன் கலைச்செல்வியை தன் வீட்டுக்கு வருமாறு அழைத்துள்ளார்.
செல்போன் உடைப்பு
இதனைதொடர்ந்து கலைச்செல்வி நேற்று முன்தினம் மாலை பானுப்பிரியாவின் வீட்டிற்கு வந்துள்ளார். இந்தநிலையில் பானுப்பிரியாவின் கணவர் விக்னேஷ் இரவு 8 மணிக்கு பணி முடிந்து வீட்டிற்கு வந்துள்ளார். அனைவரும் ஒன்றாக அமர்ந்து உணவு சாப்பிட்டனர்.
படுக்கையறைக்கு சென்ற பின் பானுப்பிரியாவுக்கும், கணவர் விக்னேசுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. பானுப்பிரியா கணவரிடம் சம்பளம் முழுவதையும் மது குடித்தே அழித்துவிடுவதாக கண்டித்துள்ளார். அதற்கு விக்னேஷ், பானுப்பிரியாவிடம் உன் சம்பளத்தை வாங்கி உன் இஷ்டப்படி செலவு செய்கிறாய் என்றும் செல்போனில் அலுவலக விஷயம் தவிர யார், யாரிடமோ பேசுகிறாய் என்று கூறி பானுப்பிரியாவின் செல்போனை போட்டு உடைத்துள்ளார்.
கழுத்தை இறுக்கி கொலை
பானுப்பிரியாவின் ஏ.டி.எம். கார்டையும் தருமாறு வற்புறுத்தி உள்ளார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு வலுத்துள்ளது. இதனைத் தொடர்ந்து விக்னேஷ், பானுப்பிரியாவின் பெல்ட்டால் அவரது கழுத்தை இறுக்கியதில் பானுப்பிரியா காயங்களுடன் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்து இறந்து விட்டதாக கூறப்படுகிறது. சிறிது நேரத்தில் விக்னேஷ் படுக்கை அறையை விட்டுவேகமாக வெளியேறி சென்றுவிட்டார். படுக்கையறையில் இருந்த பானுப்பிரியாவின் சத்தம் ஏதும் கேட்காத நிலையில் கலைச்செல்வி சந்தேகம் அடைந்து, வேகமாக அங்கு சென்று பார்த்தபோது பானுப்பிரியா முகத்திலும், கழுத்திலும் காயங்களுடன் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
கைது
இதுகுறித்து உடனடியாக அருகில் வசிக்கும் பானுப்பிரியாவின் சகோதரி கற்பகத்திற்கு கலைச்செல்வி தகவல் தெரிவித்தார். கற்பகமும் அவர் கணவர் போலீஸ் ஏட்டு பாண்டியும் உடனடியாக பானுப்பிரியா வீட்டிற்கு வந்து அவர் இறந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து கலைச்செல்வி சூலக்கரை போலீசில் புகார் செய்தார். இதனைத் தொடர்ந்து சூலக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விக்னேசை கைது செய்தனர். இச்சம்பவம் போலீஸ் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.