லாரி உதிரிபாக கடையில் திருடிய 2 பேர் கைது
லாரி உதிரிபாக கடையில் திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
கரூர்,
லாரி உதிரிபாக கடை
கரூர் தாந்தோணிமலை முத்தலாடம் பட்டியைச் சேர்ந்தவர் ராமசாமி (வயது 68). இவர் கரூரில் லாரி உதிரிபாகங்களை விற்பனை செய்யும் கடையை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் ராமசாமி வழக்கம்போல் கடையில் வியாபாரம் செய்து கொண்டிருந்தார்.
இந்தநிலையில் கடையில் இருந்த சில பொருட்கள் காணாமல் போனது தெரியவந்தது. இதையடுத்து அவர் கரூர் டவுன் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் கஸ்தூரி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
2 பேர் கைது
இதில் கடைக்கு வந்து சென்ற ஆண்டாள் கோவிலை சேர்ந்த சரவணன் (48) மற்றும் கோவை மாவட்டம் உக்கடம் ஹவுசிங் யூனிட் பகுதியைச் சேர்ந்த செல்வகுமார் (29) ஆகியோர் ரூ.5 ஆயிரம் மதிப்புள்ள லாரி உதிரிபாகங்களை திருடிச்சென்றது தெரியவந்தது.
இதனையடுத்து போலீசார் அவர்கள் 2 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் திருட்டுப்போன பொருட்கள் மீட்கப்பட்டன.