கறம்பக்குடி அருகே பள்ளி வளாகத்தில் அம்மன் சிலை வைத்து வழிபட்டதால் பரபரப்பு போலீஸ் பாதுகாப்புடன் அகற்றி மாற்று இடத்தில் வைக்கப்பட்டது

கறம்பக்குடி அருகே பள்ளி வளாகத்தில் திடீரென அம்மன் சிலையை வைத்து சிலர் வழிபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. போலீஸ் பாதுகாப்புடன் சிலை அகற்றப்பட்டு மாற்று இடத்தில் வைக்கப்பட்டது.;

Update: 2021-08-21 18:55 GMT
கறம்பக்குடி
ஊராட்சி பள்ளி 
புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே மருதன் கோன்விடுதி கிராமம் உள்ளது. இங்குள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகத்தில் நேற்று முன்தினம் பந்துவகோட்டை கிராமத்தை சேர்ந்த சிலர் திடீரென அம்மன் சிலையை வைத்து வழிபட தொடங்கினர். இதற்கு அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இருதரப்பினரிடையே மோதல் உருவாகும் சூழல் ஏற்பட்டது. இதையடுத்து ஆலங்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு வடிவேல் தலைமையில், ஏராளமாள போலீசார் அப்பகுதியில் குவிக்கப்பட்டனர்.
அம்மன் சிலை அகற்றம் 
இந்நிலையில் நேற்று கறம்பக்குடி தாசில்தார் விஸ்வநாதன், துணை தாசில்தார் ராமசாமி, கறம்பக்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் கண்ணன், சப்-இன்ஸ்பெக்டர் பிரகாஷ் மற்றும் அதிகாரிகள் இரு தரப்பினரிடையே பேச்சுவார்த்தை நடத்தினர். இதைதொடர்ந்து பள்ளி வளாகத்தில் வைக்கப்பட்ட அம்மன் சிலை போலீஸ் பாதுகாப்புடன் அகற்றப்பட்டது. தொடர்ந்து அந்த சிலை அப்பகுதி குளக்கரையில் உள்ள விநாயகர் சிலை அருகே தற்காலிகமாக வைக்கப்பட்டது. மேலும் அப்பகுதியில் அம்மன் சிலையை நிரந்தரமாக வைத்து வழிபடுவது குறித்து சமாதான கூட்டம் நடத்தி முடிவெடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தனர். பள்ளி வளாகத்தில் திடீரென அம்மன் சிலையை வைத்து வழிபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தவிர்க்க மருதன் கோன்விடுதி பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்