கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக கடைகள் அடைப்பு
திருப்பூரில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளின் காரணமாக நேற்று கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.;
திருப்பூர்
திருப்பூரில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளின் காரணமாக நேற்று கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.
கட்டுப்பாடுகள்
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கிய நிலையில் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டது. இதன் காரணமாக கொரோனா தொற்று குறைந்தது. இருப்பினும் ஒரு சில மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகமாக இருந்தது.
அதன்படி கோவை, திருப்பூர், நாமக்கல் உள்ளிட்ட சில மாவட்டங்களில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. திருப்பூர் மாவட்டத்தை பொறுத்தவரை பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகள் அடையாளம் காணப்பட்டு அந்த பகுதியில் மட்டும் சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகளில் வணிக கடைகள் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது.
கோவில்கள்
அதன்படி மாவட்டத்தில் பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய 2 நாட்கள் கடந்த சில வாரங்களாக கடைகள் அடைக்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில் நேற்று புதுமார்க்கெட் வீதி, துளசி ராவ் வீதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.
மேலும், வழிபாட்டு தலங்களுக்கும் தடை விதிக்கப்பட்ட நிலையில் பெருமாள்கோவில் உள்ளிட்ட முக்கியமான கோவில்களின் நடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. பக்தர்கள் இன்றி கோவில்கள் காணப்பட்டன. பக்தர்கள் பலர் பூட்டிய கோவில் முன்பு நின்று வழிபட்டனர்.
இன்று (ஞாயிற்றுக்கிழமை) பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்க அதிகளவு கூடுவார்கள் என்பதால் சந்தை உள்ளிட்ட பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.