பெரியகுளம் அருகே கயிற்றால் கழுத்தை இறுக்கி ஆட்டோ டிரைவர் கொலை தற்கொலை செய்ததாக நாடகமாடிய மனைவி கைது
பெரியகுளம் அருகே கயிற்றால் கழுத்தை இறுக்கி ஆட்டோ டிரைவர் கொலை செய்யப்பட்டார். தற்கொலை செய்ததாக நாடகமாடிய மனைவி கைது செய்யப்பட்டார்.
பெரியகுளம் :
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள டி.கள்ளிப்பட்டியை சேர்ந்தவர் ரஞ்சித்குமார் சிங் (வயது 35). ஆட்டோ டிரைவர். அவருடைய மனைவி சத்யா (28). இந்த தம்பதிக்கு லிபினாஸ்ரீ (1½) என்ற பெண் குழந்தை உள்ளது.
ரஞ்சித்குமார்சிங்குக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாக கூறி, சத்யா கணவரிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டார். இந்நிலையில் கடந்த 18-ந்தேதி இரவு ரஞ்சித்குமார்சிங் வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
அப்போது சத்யா, உறவினர்களிடம் தனது கணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்தார்.
கழுத்தை இறுக்கி கொலை
இதுகுறித்து தகவல் அறிந்த தென்கரை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, ரஞ்சித்குமார் சிங் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்தநிலையில் ரஞ்சித்குமார்சிங்கின் சாவில் சந்தேகம் இருப்பதாக, அவரது தந்தை ராஜூ தென்கரை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இதற்கிடையே பிரேத பரிசோதனை அறிக்ைகயில், ரஞ்சித்குமார்சிங் கயிற்றால் கழுத்தை இறுக்கி கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து சந்தேகத்தின்பேரில் சத்யாவிடம் போலீசார் துருவித்துருவி விசாரணை நடத்தினர்.
விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியானது. அதாவது, ரஞ்சித்குமார் சிங்கை கழுத்தை இறுக்கி சத்யா கொலை செய்து விட்டு தற்கொலை நாடகமாடியது தெரியவந்தது.
மனைவி கைது
சம்பவத்தன்று இரவு, குடிபோதையில் ரஞ்சித்குமார்சிங் வீட்டில் மயங்கி கிடந்துள்ளார். அப்போது, கயிற்றால் கழுத்தை இறுக்கி சத்யா அவரை கொலை செய்துள்ளார். இதையடுத்து சத்யாவை போலீசார் கைது செய்தனர்.
இந்த சம்பவம் பெரியகுளம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.