சுற்றுலா பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை தீவிரம்

குஞ்சப்பனை சோதனைச்சாவடியில் சுற்றுலா பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை தீவிரமாக மேற்கொள்ளப்படுகிறது.

Update: 2021-08-21 17:21 GMT
கோத்தகிரி,

நீலகிரி மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இந்த நிலையில் ஊரடங்கில் தளர்வு அறிவிக்கப்பட்டதால், வெளிமாவட்டங்களில் இருந்து நீலகிரி மாவட்டத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

சுற்றுலா தலங்கள் மூடப்பட்டு இருந்தாலும், அவர்கள் நீலகிரிக்கு வந்து தனியார் விடுதிகளில் ஓய்வெடுத்துவிட்டு இயற்கை அழகை ரசித்து திரும்பி செல்கின்றனர். அதிகளவில் வரும் சுற்றுலா பயணிகளால் நீலகிரி மாவட்டத்தில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. 

இதையொட்டி நீலகிரி மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின்படி எல்லையில் உள்ள சோதனைச்சாவடிகளில் சுகாதாரத்துறை ஊழியர்கள் கொரோனா பரிசோதனை செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி குஞ்சப்பனை சோதனைச்சாவடி வழியாக மாவட்டத்துக்குள் வரும் அரசு பஸ் மற்றும் தனியார் வாகனங்களை மறித்து, அதில் உள்ள பயணிகளிடம் சளி மாதிரி சேகரித்து, கொரோனா பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர். 

மேலும் வெளிமாநிலங்களில் இருந்து அத்தியாவசிய தேவைகளுக்காக நீலகிரிக்கு வருபவர்கள் 72 மணி நேரத்திற்குள் எடுத்த கொரோனா பரிசோதனை சான்றிதழை வைத்திருந்தால் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்