விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இடி- மின்னலுடன் பலத்த மழை உப்பளத்தை தண்ணீர் சூழ்ந்தது
விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இடி- மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதில் மரக்காணம் உப்பளத்தை தண்ணீர் சூழ்ந்தது.
விழுப்புரம்,
பலத்த மழை
வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. அதன்படி தமிழகத்தின் பல மாவட்டங்களில் நேற்று அதிகாலை முதல் பலத்த மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் விழுப்புரம் நகரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான கோலியனூர், காணை, வளவனூர், பெரும்பாக்கம், தோகைப்பாடி, கல்பட்டு, சிந்தாமணி, அய்யூர்அகரம், கப்பியாம்புலியூர், குச்சிப்பாளையம், பிடாகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் நேற்று அதிகாலை 5.30 மணியளவில் பலத்த காற்றுடன் லேசான சாரல் மழை பெய்யத்தொடங்கியது. அடுத்த சில நிமிடங்களில் இடி- மின்னலுடன் கூடிய பலத்த மழையாக பெய்ய ஆரம்பித்தது. இந்த மழை இடைவிடாமல் ½ மணி நேரமாக கொட்டித்தீர்த்தது.
தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது
இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் குளம்போல் தேங்கியது. பலத்த மழையினால் விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் ரெயில்வே சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்கியது. உடனே நகராட்சி ஊழியர்கள் விரைந்து சென்று தேங்கியிருந்த தண்ணீரை மின்மோட்டார் மூலம் வெளியேற்ற நடவடிக்கை எடுத்தனர்.அதன் பிறகு சிறிது நேரம் மழை ஓய்ந்திருந்த நிலையில் மீண்டும் காலை 7 மணியளவில் சாரல் மழை பெய்ய ஆரம்பித்தது. இந்த மழை நேற்று மதியம் வரை விட்டுவிட்டு தூறிக்கொண்டே இருந்தது. இதனால் பொதுமக்கள், இருசக்கர வாகன ஓட்டிகள் குடைபிடித்தபடி சென்றதை காண முடிந்தது. இந்த மழையின் காரணமாக விழுப்புரம்- பண்ருட்டி சாலையில் வாணியம்பாளையம், சுந்தரிப்பாளையம் பகுதிகளில் உள்ள குண்டும்- குழியுமான இடங்களில் மழைநீர் தேங்கி நின்றது. இதனால் அந்த சாலையில் செல்ல முடியாமல் வாகன ஓட்டிகள் மிகவும் அவதியடைந்தனர். மேலும் காணை அருகே அகரம்சித்தாமூரில் உள்ள ஒரு விவசாய மின் மோட்டார் கொட்டகையில் மின்னல் தாக்கியதில், அந்த கொட்டகை முற்றிலும் தீப்பிடித்து எரிந்தது. இதில் அங்கிருந்த மின் மோட்டார், மருந்து தெளிப்பான், உர மூட்டைகள் சேதமடைந்தது.
உப்பு உற்பத்தி பாதிப்பு
இதேபோல் செஞ்சி பகுதியிலும் நேற்று மழை பெய்தது. இதனால் பஸ்நிலையத்தில் தண்ணீர் பெருகி குளம்போல் காட்சி அளித்தது. இதுபற்றி அறிந்த பேரூராட்சி செயல் அலுவலர் ராமலிங்கம், துப்புரவு மேற்பார்வையாளர் பார்கவி ஆகியோர் மேற்பார்வையில் துப்புரவு பணியாளர்கள் விரைந்து செயல்பட்டு தண்ணீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர். மேலும் மரக்காணம் பகுதியில் பெய்த மழையின் காரணமாக, அங்குள்ள உப்பளத்தில் மழைநீர் தேங்கியது. இதனால், உப்பு உற்பத்தி பணி முடங்கியது.
பொதுமக்கள் மகிழ்ச்சி
மாவட்டத்தில் பிற பகுதியான விக்கிரவாண்டி, திருவெண்ணெய்நல்லூர், மயிலம், கண்டமங்கலம், செஞ்சி, மேல்மலையனூர், மரக்காணம், ஆரோவில், கோட்டக்குப்பம், வானூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் பலத்த மழை பெய்தது. கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் மழையினால் ஏரி, குளங்களுக்கு மெல்ல, மெல்ல நீர்வரத்து வரத்தொடங்கியுள்ளது. இதனால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம், மூங்கில்துறைப்பட்டு, ரிஷிவந்தியம் பகுதிகளில் நேற்று காலை 5.45 முதல் 8 மணி வரை சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதனால் சங்கராபுரம் பஸ் நிலைய வளாகம் உள்பட தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கியது. சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடின. சங்கராபுரம் பகுதியில் சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக பெய்த மழையால் அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். இதேபோல் கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் நேற்று இடி-மின்னலுடன் மழை பெய்தது.