நீலகிரி மாவட்டத்தில் ஓணம் பண்டிகை கொண்டாட்டம்

நீலகிரி மாவட்டத்தில் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது. அத்தப்பூ கோலமிட்டு மலையாள மக்கள் மகிழ்ந்தனர்.

Update: 2021-08-21 16:56 GMT
கூடலூர்,

ஆவணி மாத திருவோண நட்சத்திரத்தில் கொண்டாடப்படும் ஓணம் பண்டிகை கேரளாவில் பிரபலமானது. நீலகிரி மாவட்டத்தில் மலையாள மொழி பேசும் மக்கள் கணிசமாக வாழ்ந்து வருகின்றனர். 

அதன்படி ஊட்டியில் நேற்று மலையாள மக்கள் தங்களது வீடுகளில் ஓணம் பண்டிகையை கொண்டாடினர். மாவேலி மன்னனை வரவேற்கும் விதமாக வீடுகளில் அத்தப்பூ கோலமிட்டு இருந்தனர்.

ஊட்டி அய்யப்பன் கோவிலில் ஆண்டுதோறும் ஓணம் பண்டிகையையொட்டி பக்தர்களுடன் சிறப்பு பூஜை நடைபெறுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு கொரோனா பரவலை தடுக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கோவில்களை மூட உத்தரவிடப்பட்டது. 

இதனால் நேற்று பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. எனினும் சிறப்பு பூஜை நடந்தது. கோவில் வளாகத்தில் அத்தப்பூ கோலம் போடப்பட்ட து.

இதேபோன்று கூடலூர், பந்தலூர் தாலுகாக்களில் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது. முன்னதாக பெண்கள் புத்தாடை அணிந்து வீட்டுவாசல்களில் பல்வேறு வண்ண மலர்களால் அத்தப்பூ கோலமிட்டனர். தொடர்ந்து விளக்குகளை ஏற்றி வைத்து வழிபட்டனர். மேலும் கூடலூர் பகுதியில் உள்ள மகா விஷ்ணு கோவில்களில் ஓணம் பண்டிகையையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. 

ஆண்டுதோறும் ஓணம் பண்டிகையையொட்டி கூடலூர், பந்தலூர் தாலுகாக்களில் பல்வேறு விளையாட்டு போட்டிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் களை கட்டுவது வழக்கம். ஆனால் கொரோனா கட்டுப்பாடுகள் அமலில் உள்ளதால், அவை எதுவும் நடத்தப்படவில்லை.

கோத்தகிரி மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் வாழ்ந்து வரும் மலையாள மக்கள் தங்களது வீடுகளின் வாசலில் பல்வேறு வண்ண மலர்களை கொண்டு அத்தப்பூ கோலமிட்டனர். மேலும் அதிகாலையிலேயே எழுந்து புத்தாடை அணிந்து கோவில்களுக்கு சென்று சிறப்பு வழிபாடுகளை நடத்தினர். மதியம் பல வகை கொண்ட  ஓணம் சத்யா என்ற உணவுகளை தயாரித்து குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் உண்டு மகிழ்ந்தனர்.

மேலும் செய்திகள்