ஒரே நாளில் அடுத்தடுத்த சம்பவம்: தூங்கிக் கொண்டிருந்த 3 பெண்களிடம் தங்க சங்கிலி பறிப்பு உளுந்தூர்பேட்டை மக்கள் பீதி
தூங்கிக் கொண்டிருந்த 3 பெண்களிடம் மர்மநபர்கள் தங்க சங்கிலியை பறித்துச் சென்றனர். ஒரே நாளில் அடுத்தடுத்து நடந்த 3 சம்பவங்களால் உளுந்தூர்பேட்டை மக்கள் பீதியடைந்துள்ளனர்.
உளுந்தூர்பேட்டை,
தங்க சங்கிலி பறிப்பு
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை கிழக்கு கந்தசாமிபுரம் பகுதியை சேர்ந்தவர் சக்திவேல் மனைவி ஜானகி(வயது 30). இவர் நேற்று முன்தினம் இரவு காற்றோட்டத்துக்காக வீட்டின் கதவை திறந்து வைத்து விட்டு குடும்பத்துடன் தூங்கிக் கொண்டிருந்தார். நள்ளிரவு 1 மணியளவில் வீட்டுக்குள் புகுந்த மர்மநபர் ஒருவர், தூங்கிக் கொண்டிருந்த ஜானகியின் கழுத்தில் கிடந்த 4 பவுன் சங்கிலியை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பியோடினார். இதில் திடுக்கிட்டு எழுந்த ஜானகி மற்றும் அவரது குடும்பத்தினர், அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தப்பியோடிய திருடனை விரட்டிச் சென்றனர். ஆனால் அந்த மர்மநபர் தலைமறைவாகி விட்டார்.
மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
இதேபோல் உளுந்தூர்பேட்டை-விருத்தாசலம் சாலை கணேசன் நகரில் வீட்டின் கதவை திறந்து வைத்து தூங்கிக் கொண்டிருந்த ஜெயசீலன் மனைவி சுமத்ரா(32) என்பவரது கழுத்தில் கிடந்த 1½ பவுன் சங்கிலி மற்றும் மாடல் காலனியில் வீட்டின் கதவை திறந்து வைத்து தூங்கிக் கொண்டிருந்த சக்திவேல் மகள் கயல்விழி(15) கழுத்தில் அணிந்திருந்த 1 பவுன் சங்கிலியையும் நேற்று முன்தினம் நள்ளிரவு மர்மநபர்கள் பறித்துச் சென்றுள்ளனர். ஒரே நாளில் நடந்த இந்த நகை பறிப்பு சம்பவங்கள் தொடர்பாக கொடுத்த தனித்தனி புகார்களின்பேரில் உளுந்தூர்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதோடு, நகை பறிப்பில் ஈடுபட்ட மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.
தொடர் சம்பவங்களால் பொதுமக்கள் பீதி
கடந்த 2 நாட்களில் மட்டும் உளுந்தூர்பேட்டை ஏரிக்கரை பெரியாயி அம்மன் கோவில் தங்க தாலி திருட்டு, விருத்தாசலம் சாலையில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் பணம் திருட்டு, முதியவர் வீட்டில் கொள்ளை முயற்சி மற்றும் நேற்று முன்தினம் நள்ளிரவு வீடுகளில் தூங்கிக் கொண்டிருந்த 3 பெண்களிடம் அடுத்தடுத்து நகை பறிப்பு சம்பவங்கள் நடைபெற்றுள்ளதால், உளுந்தூர்பேட்டை நகர மக்கள் பீதி அடைந்துள்ளனர். மேலும் உளுந்தூர்பேட்டை பகுதியில் தொடர்ந்து நடைபெற்று வரும் திருட்டு, கொள்ளை போன்ற குற்ற சம்பவங்களை தடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜியாவுல்ஹக் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உளுந்தூர்பேட்டை நகர மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.