தரமற்ற அரிசி வழங்கப்படுவதாக கூறி மல்லியம் கிராம மக்கள், ரேஷன் அரிசியை சாலையில் கொட்டி ஆர்ப்பாட்டம்

தரமற்ற அரிசி வழங்கப்படுவதாக கூறி மல்லியம் கிராம மக்கள் ரேஷன் அரிசியை சாலையில் கொட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2021-08-21 12:08 GMT
மயிலாடுதுறை, 

மயிலாடுதுறை அருகே மல்லியம் கிராமத்தில் தரமற்ற அரிசி வழங்குவதாக குறை கூறி அந்தபகுதி மக்கள் ரேஷன் அரிசியை சாலையில் கொட்டி ரேஷன் கடை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தொடர்ந்து தரமற்ற அரிசி வழங்கிவரும் அரசை கண்டித்தும், ரேஷன் கடைகளில் தரமான அரிசி வழங்கக் கோரியும் பொதுமக்கள் கோஷமிட்டனர்.

இதுகுறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறுகையில், கடந்த ஒரு ஆண்டு காலமாக ரேஷன் கடையில் கருப்பு நிறத்திலும், மஞ்சள் நிறத்திலும் துர்நாற்றம் வீசும் அரிசியை வினியோகம் செய்து வருகின்றனர். இதுகுறித்து பலமுறை அதிகாரிகளிடம் கூறியும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மயிலாடுதுறை வட்ட வழங்கல் அலுவலர் சாந்தி மற்றும் குத்தாலம் போலீசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்களிடம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் தரமான அரிசி வழங்க நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர் அதன்பேரில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்