தமிழக முதல்-அமைச்சர் ஆட்சியில் உறுப்பினர்களின் கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றப்படும்

தமிழக முதல்-அமைச்சர் ஆட்சியில் உறுப்பினர்களின் கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றப்படும் என்று ஒன்றியக்குழு கூட்டத்தில் தலைவர் நந்தினி ஸ்ரீதர் பேசினார்.

Update: 2021-08-21 11:49 GMT
பொறையாறு,

செம்பனார்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் ஒன்றியக்குழு கூட்டம் நடைெபற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக்குழு தலைவர் நந்தினி ஸ்ரீதர் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் மைனர் பாஸ்கரன், மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள் ரபியாநர்கிஸ் பானு, துளசிரேகா, ஆகியோர் முன்னிலை வகித்தனர். செம்பனார்கோவில் ஒன்றிய ஆணையர் மஞ்சுளா வரவேற்று பேசினார். அதனை தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் பேசியதாவது:-

ராஜ்கண்ணன்:- சுதந்திர தின விழாவில் அனைத்து உறுப்பினர்களையும் கவுரவபடுத்தும் வகையில் நினைவு பரிசுகள் வழங்கியமைக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். ஊராட்சிகளில் இலவச வீடுகள் கட்டுமான பணி பாதியில் நிற்கிறது. வீடுகள் கட்டும் திட்டத்தில் தகுதியான ஒப்பந்தகாரர்களை வைத்து வீடு கட்ட வேண்டும்.

ஆணையர் மஞ்சுளா:- இது தொடர்பாக நேரில் ஆய்வு செய்து வீடுகள் முழுமை பெற நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

தேவிகா:- எரவாஞ்சேரி பகுதியில் பல இடங்களில் மின் கம்பம் இல்லாததால் இருள் சூழ்ந்துள்ளது.

மோகன்தாஸ்:- செம்பனார்கோவில் ஒன்றியத்தில் உள்ள பல ஊராட்சிகளில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் படம் வைக்கபடாமல் உள்ளது. ஒன்றியக்குழு தலைவர் ஊராட்சி அலுவலகங்களுக்கு நேரில் சென்று ஆய்வு செய்து, படம் வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சக்கரபாணி:- கருவாக்கரையில் ரூ.18 லட்சம் செலவில் இ-சேவை மையம் கட்டப்பட்டு இன்னும் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்படாமல் இருக்கிறது. அதை உடனடியாக திறந்து மக்கள் செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.

கிருஷ்ணன்:- பரசலூர் பகுதியில் உள்ள சாலைகள் மண் சாலையாக இருப்பதால் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. அதை தார் சாலையாக மாற்றி தர வேண்டும்.

ரஜினி:- சேமங்கலம் ஊராட்சி எருமல் கிராமத்தில் மழை காலங்களில் வெள்ளநீர் கிராமத்திற்கு புகுந்து விடுகிறது அதை தடுக்கும் வகையில் தடுப்பு சுவர் அமைத்து தர வேண்டும்.

ஆணையர் மஞ்சுளா:- வீடு கட்டும் திட்டத்தில் தகுதியானவர்கள் பட்டியல் வரும் போது அந்த பட்டியல் ஒன்றியக்குழு உறுப்பினர்களுக்கு அனுப்பி வைக்கப்படும் என்றார்.

இறுதியில் பேசிய ஒன்றியக்குழு தலைவர் நந்தினிஸ்ரீதர், தமிழகத்தில் முதல்-அமைச்சர் ஸ்டாலின் மிக சிறப்பான ஆட்சி நடத்தி வருகிறார். இந்த ஆட்சியில் மக்களின் சேவைகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டு வருகிறது. அந்த வகையில் செம்பனார்கோவில் ஊராட்சி ஒன்றியத்தில் உறுப்பினர்கள் கோரிக்கைகள் அனைத்தும் படிபடியாக நிறைவேற்றப்படும் என்றார்.

கூட்டத்தில் அனைத்து ஒன்றியக்குழு உறுப்பினர்கள் அலுவலர்கள் கலந்து கொண்டனர். முடிவில் வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சிகள்) திருமலைகண்ணன் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்