ஆடித்திருவிழா பெரியபாளையம் அம்மன் கோவிலுக்கு ரூ.19 லட்சம் நிதி ஒதுக்க கவுன்சிலர்கள் எதிர்ப்பு
ஆடித்திருவிழாவையொட்டி பெரியபாளையம் அம்மன் கோவிலுக்கு ரூ.19 லட்சம் நிதி ஒதுக்க கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
ஊத்துக்கோட்டை,
திருவள்ளுவர் மாவட்டம் பெரியபாளையத்தில் புகழ் பெற்ற பவானி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் ஆடி மாதத்தையொட்டி திருவிழா நடைபெறுவது வழக்கம். ஆடி மாதத்தில் தொடங்கி சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் 12 வாரங்களுக்கு கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம்.
இதில் திருவள்ளூர் மாவட்டம் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து ஆடு, கோழிகளை பலியிடுவது வழக்கம். வேப்பிலை ஆடைகளை அணிந்தும், மொட்டை அடித்தும் நேர்த்திக்கடன் செலுத்துவது உண்டு. அப்படி வரும் பக்தர்கள் பெரும்பாலும் சாலை ஓரங்களில், கோவில் பின்புறத்தில் உள்ள ஆரணி ஆற்றங்கரையில், காலி மைதானங்களில் தங்கி சமைத்து சாப்பிட்டு தூங்குவது வழக்கம்.
திருவிழாவுக்கு வரும் பக்தர்களின் நலனை கருத்தில் கொண்டு எல்லாபுரம் ஒன்றிய பொது நிதியில் இருந்து நிதி ஒதுக்கப்படும். அதாவது பக்தர்களுக்கு குடிநீர் வழங்க, கழிவறைகள் கட்ட, பிளீச்சிங் பவுடர் தெளிக்க, கொசு மருந்து பீய்ச்சி அடிக்க இந்த நிதி ஒதுக்கப்படும். இந்த ஆண்டு திருவிழாவுக்காக ரூ.19 லட்சம் நிதி ஒதுக்கியதாக கூறப்படுகிறது. தற்போது ஆடித்திருவிழா நடந்து வருகிறது.
கொரோனா தொற்று பரவலை தடுக்க பெரியபாளையம் பவானி அம்மன் கோவில் உள்பட அனைத்து கோவில்களிலும் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்படாது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இந்தநிலையில் எல்லாபுரம் ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டம் பெரியபாளையம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடைபெற்றது. ஒன்றிய குழு தலைவர் ரமேஷ் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் வக்கீல் சுரேஷ், வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கும்மிடிபூண்டி எம்.எல்.ஏ. டி.ஜே. கோவிந்தராஜன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டார். அப்போது துறை சார்ந்த அதிகாரிகள் யாரும் கூட்டத்தில் ஆஜராகவில்லை.
இது குறித்து எம்.எல்.ஏ.கோவிந்தராஜன் பேசும்போது:-
பொது மக்களின் பிரச்சினைகளை தீர்த்து வைப்பதற்காக ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டம் கூட்டப்படுகிறது. இதுபோன்ற கூட்டங்களில் பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகள் ஆஜராக வேண்டும். இனி நடக்கும் கூட்டங்களில் ஆஜராகாத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தார். அதன்பின்னர் அவர் கூட்டத்தை விட்டு சென்று விட்டார். அதன் பின்னர் கவுன்சிலர் கூட்டம் தொடர்ந்து நடைபெற்றது.
அப்போது பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்கு நிதி ஒதுக்க ஒப்புதல் கோரும் தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டன.
பா.ம.க. கவுன்சிலர் புஷ்பா முருகன் பேசியதாவது:-
கொரோனா பரவலை தடுக்க கோவில்களில் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்களுக்கு அனுமதி கிடையாது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த நிலையில் பவானி அம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக ரூ.19 லட்சம் நிதி ஒதுக்க முடிவு செய்திருப்பது அனுமதிக்க முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்தார். இதற்கு தி.மு.க, அதி.மு.க. உட்பட அனைத்து கட்சி கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். நிதி ஒதுக்க கூடாது என்று பா.ம.க. கவுன்சிலர் புஷ்பா முருகன் கொண்டு வந்த தீர்மானத்திற்கு அனைத்து கட்சி கவுன்சிலர்கள் ஒருமனதாக ஆதரவு தெரிவித்தனர். இதனால் அந்த தீர்மானம் நிறைவேறவில்லை.
மேலும் ஊராட்சியில் நடைபெற்று வரும் வளர்ச்சி் பணிகள் குறித்து ஒன்றிய கவுன்சிலர்களுக்கு தகவல் தெரிவிப்பதில்லை என்று கவுன்சிலர்கள் ஆதங்கப்பட்டனர். கொரோனா தொற்று ஒழிப்புக்காக நியமித்த தூய்மை பணியாளர்கள் சரிவர பணிகள் செய்வதில்லை என்று குற்றம் சாட்டினர். குண்டும் குழியுமாக காட்சியளிக்கும் சாலைகளை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
கடைசியாக வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேஸ்வரி பேசியதாவது:-
பவானி அம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் வசதிக்காக நிதி ஒதுக்கும் தீர்மானம் நிறைவேறாதது குறித்து திருவள்ளூர் மாவட்ட கலெக்டருக்கு தகவல் தெரிவிக்கப்படும் என்று அறிவித்தார். அடுத்து வரும் கூட்டங்களில் அனைத்து தரப்பு துறை அதிகாரிகளும் கலந்து கொள்ளும் விதத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார். இதில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஸ்டாலின், கவுன்சிலர்கள் குழந்தைவேலு, சுரேஷ், வித்யாலட்சுமி, வேதகிரி உள்பட அனைத்து கவுன்சிலர்களும் கலந்து கொண்டனர்.