பெண் போலீசை தாக்கிய தந்தை, மகன் மீது வழக்கு

திருவள்ளூரை அருகே பெண் போலீசை தாக்கிய தந்தை, மகன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Update: 2021-08-21 10:57 GMT
திருவள்ளூர்,

திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் பிஞ்சிவாக்கம் காலனி மேட்டு தெருவை சேர்ந்தவர் ஜெயலேந்திரன். இவரது மகன் சதீஷ் (வயது 39). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவருக்கு சரண்யா என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கணவன், மனைவிக்கு இடையே குடும்பத்தகராறு காரணமாக கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

இதன் காரணமாக கோபித்து கொண்ட சரண்யா தனனுடைய தாய் வீடான திருவள்ளூரை அடுத்த திருநின்றவூர் நத்தம்பேட்டில் உள்ள வீட்டுக்கு சென்று விட்டார். மேலும் அவர் தன்னுடைய 2 குழந்தைகளையும் கணவரிடம் இருந்து மீட்டுத்தருமாறு திருவள்ளூரில் உள்ள அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். 

புகாரை தொடர்ந்து நேற்று முன்தினம் பெண் போலீஸ் குமுதவல்லி மற்றும் சரண்யா ஆகியோர் பிஞ்சிவாக்கம் கிராமத்தில் உள்ள சதீஷ் வீட்டுக்கு சென்றனர். அப்போது அங்கு இருந்த சதீஷ் அவரது தந்தை ஜெயலேந்திரன் ஆகியோர் குழந்தைகளை அனுப்ப மறுப்பு தெரிவித்து தகராறில் ஈடுபட்டனர். 

மேலும் ஆத்திரம் அடைந்த தந்தை, மகன் இருவரும் பெண் போலீஸ் குமுதவல்லியை தகாத வார்த்தையால் பேசி தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். இதுகுறித்து அவர் கடம்பத்தூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் இது சம்பந்தமாக சதீஷ், அவரது தந்தை ஜெயலேந்திரன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்