குன்றத்தூர் முருகன் கோவிலில் 30-க்கும் மேற்பட்ட திருமணங்கள்; எந்த ஜோடி முதலில் தாலி கட்டிக்கொள்வது என்று இரு வீட்டார் இடையே தள்ளுமுள்ளு
குன்றத்தூர் முருகன் கோவிலில் நேற்று 30-க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடந்தது. அப்போது எந்த ஜோடி முதலில் தாலி கட்டிக்கொள்வது என்று இரு திருமண வீட்டார் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
முதல் முகூர்த்த நாள்
கொரோனா தாக்கம் காரணமாக வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வழிபாட்டு தலங்களுக்கு மக்கள் சென்று வழிபட அரசு தடை விதித்துள்ளது. அதன்படி வெள்ளிக்கிழமையான நேற்றும் கோவில்கள் அடைக்கப்பட்டிருந்தன. அதேநேரத்தில் நேற்று வரலட்சுமி நோன்பு, சிவ பக்தர்களுக்கு முக்கியமான பிரதேஷம் மற்றும் ஆவணி மாதத்தின் முதல் முகூர்த்த நாளாகும். இதனால் பக்தர்கள் கோவிலுக்கு வெளியே நின்று வழிபாடு நடத்தினர்.மேலும் முகூர்த்தநாள் என்பதால் ஏற்கனவே கோவிலில் பதிவு செய்திருந்த திருமணங்கள் மட்டும் கோவிலுக்குள் நடந்தது. கோவிலில் பதிவு செய்யப்படாத திருமணங்கள் அனைத்தும் கோவிலுக்கு வெளியே வாசலிலே நடைபெற்றன.
30-க்கும் மேற்பட்ட திருமணங்கள்
அதன்படி நேற்று குன்றத்தூர் முருகன் கோவிலில் 30-க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடைபெற்றது. காலையில் முகூர்த்தம் என்பதால் முருகன் கோவிலில் திருமண வீட்டார் மற்றும் அவர்களது உறவினர்கள் என அதிகளவில் குவிந்தனர்.கோவிலுக்குள் சென்று தாலி கட்டி வர ஒவ்வொரு ஜோடிக்கும் 10-ல் இருந்து 15 நிமிடங்கள் வரை மட்டும் ஒதுக்கப்பட்டது. திருமணத்துக்கு வந்த உறவினர்களுக்கு உணவு அளிப்பதற்காக மலையடிவாரத்தின் கீழ் உள்ள பகுதிகளில் பந்தல்கள் அமைத்து உணவு பரிமாறப்பட்டது.ஒரே நேரத்தில் 30-க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடந்ததால் அதில் பங்கேற்றவர்கள், சமூக இடைவெளியை மறந்து ஒருவரை ஒருவர் முண்டியடித்தபடி நின்றனர். கோவில் வளாகம் முழுவதும் பொதுமக்கள் தலையே காணப்பட்டது.
இரு வீட்டார் இடையே தள்ளுமுள்ளு
இதனால் கூட்ட நெரிசலில் எந்த ஜோடி முதலில் கோவிலுக்குள் சென்று தாலி கட்டிக்கொள்வது என்பது தொடர்பாக இரு திருமண வீட்டார் இடையே தகராறு ஏற்பட்டது. கோவில் வளாகத்தில் இரு வீட்டார்களும் தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டனர். ஒருவரை ஒருவர் சரமாரியாகவும் தாக்கிக்கொண்டனர். இதனால் திருமணத்துக்கு வந்த அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் அங்கு பரபரப்பும் ஏற்பட்டது.இதையடுத்து அங்கு வந்த குன்றத்தூர் போலீசார், அதிக அளவில் கோவிலுக்குள் இருந்த பொதுமக்களை வெளியேற்றினர். பின்னர் கோவிலின் வெளிப்புற கதவை பூட்டி, கோவில் வளாகம் முன்பு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
சென்னையில்...
சென்னையிலும் கோவில்கள் முன்பு ஒரு சிலர் மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டனர். கோவிலுக்குள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. வீடுகளில் வைத்து திருமணம் நடத்தியவர்களில் சிலர் மணமக்களுடன் கோவில்களுக்கு வந்திருந்து, கோவிலுக்கு வெளியே வழிபாடு நடத்தி, திரும்பி சென்றனர்.இதுபோன்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கோவிலுக்கு வெளியே திருமணங்கள் நடந்தது. திருப்பரங்குன்றம் முருகன் கோவில் முன்பு ஏராளமான புது மண ஜோடியினர் திருமணம் செய்து கொண்டனர்.