பெங்களூரு சிறையில் இறந்த கைதியின் மர்மசாவு குறித்து சி.ஐ.டி. விசாரணை

பெங்களூருவில் கொள்ளை வழக்குகளில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டு இருந்த கைதி மர்மமான முறையில் இறந்துள்ளார். விசாரணையின் போது போலீசாரிடம் இருந்து தப்பி ஓட முயன்றபோது கீழே விழுந்து அவர் உயிர் இழந்தாரா? என சி.ஐ.டி. போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

Update: 2021-08-20 21:19 GMT
பெங்களூரு:

34 வழக்குகளில் தொடர்பு

  பெங்களூரு கே.பி.அக்ரஹாரா அருகே வசித்து வந்தவர் கஜேந்திரா(வயது 24). இவர், கொள்ளை, திருட்டு, சங்கிலி பறிப்பு உள்ளிட்ட குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்தார். பெரும்பாலும் தனியாக நடந்து செல்லும் பெண்கள், பிற நபர்களை தாக்கி நகை, பணத்தை கொள்ளையடிப்பதை கஜேந்திரா தொழிலாக வைத்திருந்தார். அவர் மீது 34 வழக்குகள் பல்வேறு போலீஸ் நிலையங்களில் பதிவாகி உள்ளது.

  சிறையில் இருந்து கடந்த 3 வாரத்திற்கு முன்பாக தான் கஜேந்திரா ஜாமீனில் வெளியே வந்திருந்தார். இதற்கிடையில், கடந்த 12-ந் தேதி சந்திரா லே-அவுட் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் ஒரு டாக்டர் வீட்டில் நகை, பணம் திருட்டுப்போய் இருந்தது. இந்த சம்பவத்தில் கஜேந்திரா தான் ஈடுபட்டு இருந்ததாக போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

சிறையில் அடைப்பு

  இதையடுத்து, தலைமறைவாக இருந்த கஜேந்திராவை கைது செய்ய போலீசார் தேடி வந்த நிலையில், சந்திரா லே-அவுட் போலீசார் அவரை கைது செய்திருந்தனர். அவரிடம் விசாரணை நடத்திவிட்டு கடந்த 17-ந் தேதி பரப்பனஅக்ரஹாரா சிறையில் போலீசார் அடைத்தனர். நேற்று முன்தினம் சிறையில் இருந்த கஜேந்திராவுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது.

  இதையடுத்து, விக்டோரியா ஆஸ்பத்திரியில் அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி கஜேந்திரா இறந்துவிட்டார். போலீசாரால் கைது செய்யப்பட்டு, பரப்பனஅக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்ட விசாரணை கைதி திடீரென்று உயிர் இழந்த சம்பவம் பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளது.

தப்பி ஓடிய போது...

  விசாரணையின் போது கஜேந்திராவை போலீசார் தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனை போலீசார் மறுத்துள்ளனர். தலைமறைவாக இருந்த அவரை போலீசார் கைது செய்ய முயன்ற போது, அவர் தப்பி ஓடி உள்ளார். அப்போது தவறி விழுந்ததாகவும், அதில், அவருக்கு கால் முறிவு மற்றும் மார்பில் காயம் ஏற்பட்டு அவர் இறந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

  ஆனாலும், கஜேந்திரா உயிர் இழந்தது எப்படி? என்பது மர்மமாக உள்ளது. இதுகுறித்து பரப்பனஅக்ரஹாரா போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் கஜேந்திரா விசாரணை கைதி என்பதால், அவரது சாவு குறித்தும், அதற்கான காரணம் குறித்தும் சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்