3-வது வாரமாக வழிபாட்டு தலங்கள் மூடல்
கொரோனா பரவலை தடுக்க அரசின் உத்தரவுபடி, குமரி மாவட்டத்தில் தொடர்ந்து 3-வது வாரமாக அனைத்து வழிபாட்டு தலங்களும் மூடப்பட்டன.
நாகர்கோவில்,
கொரோனா பரவலை தடுக்க அரசின் உத்தரவுபடி, குமரி மாவட்டத்தில் தொடர்ந்து 3-வது வாரமாக அனைத்து வழிபாட்டு தலங்களும் மூடப்பட்டன.
வாரத்தில் 3 நாட்கள்...
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததை தொடர்ந்து சில கட்டுபாடுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது. அதன்படி வாரத்தில் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாட்கள் கோவில்கள், கிறிஸ்தவ ஆலயங்கள் மற்றும் மசூதிகளை மூட அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால் வழிபாட்டு தலங்களில் தினமும் வழக்கமாக நடைபெறும் பூஜைகள், பிரார்த்தனைகள் மற்றும் தொழுகைகளை பொதுமக்கள் இன்றி நடத்த அனுமதிக்கப்பட்டுள்ளது.
அதன்படி குமரி மாவட்டத்தில் கடந்த 6,7,8 ஆகிய தேதிகளிலும், 2-வது வாரமாக 13, 14 மற்றும் 15 ஆகிய தேதிகளிலும் அனைத்து வழிபாட்டு தலங்களும் மூடப்பட்டன. ஆனால் கோவில்களில் வழக்கமாக நடைபெறும் பூஜைகள், பக்கதர்கள் இன்றி நடைபெற்றது.
3-வது வாரமாக
இந்த நிலையில் 3-வது வாரமாக நேற்று அனைத்து வழிபாட்டு தலங்களும் மூடப்பட்டு பக்தர்கள் வழிபட அனுமதி மறுக்கப்பட்டது. ஆவணி மாத முதல் வெள்ளிக்கிழமையான நேற்று கோவில்கள் திறக்கப்படாததால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர். சிலர் கோவில்களின் வெளியே நின்று சாமி தரிசனம் செய்து விட்டு சென்றனர்.
நாகர்கோவில் நாகராஜா கோவிலில் நேற்று காலை ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர். ஆனால் கோவில் நுழைவு வாயில் பூட்டப்பட்டு, அறிவிப்பு பலகை ஒன்று தொங்கவிட பட்டிருந்தது. அதில் அரசு உத்தரவுபடி கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி இல்லை என்றும், வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு ஆகிய 3 நாட்களும் இத்தகைய நடவடிக்கை நீடிக்கும் என எழுதப்பட்டிருந்தது. இதனை கண்ட பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
இதேபோல் மாவட்டத்தில் உள்ள பல்வேறு வழிபாட்டு தலங்கள் நேற்று மூடப்பட்டன. மேலும் இன்றும் (சனிக்கிழமை), நாளையும் (ஞாயிற்றுக்கிழமை) அனைத்து வழிபாட்டு தலங்கள் மூடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.