ரூ.13 லட்சம், 45 பவுன் நகையுடன் சென்ற தாய், மகள் எங்கே?

மார்த்தாண்டத்தில் ரூ.13 லட்சம், 45 பவுன் நகை மற்றும் காருடன் மாயமான தாய், மகள் எங்கே? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2021-08-20 21:13 GMT
குழித்துறை, 
மார்த்தாண்டத்தில் ரூ.13 லட்சம், 45 பவுன் நகை மற்றும் காருடன் மாயமான தாய், மகள் எங்கே? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
மாயமான தாய்-மகள்
மார்த்தாண்டம் கொடுங்குளம் பகுதியை சேர்ந்தவர் மோகன்ராஜ் (வயது 41). இவர் கார் வாங்கி விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். இவருடைய மனைவி சோனியா காந்தி (35). இவர்களுக்கு ஆதர்ஷா (7½) என்ற மகளும், ஒரு மகனும் உள்ளனர். 
இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு சோனியா காந்தி, மகன், மகளுடன் ஒரு அறையில் தூங்கினார். மறுநாள் காலையில் மோகன்ராஜ் எழுந்து பார்த்த போது சோனியா காந்தியையும் மகள் ஆதர்ஷாவையும் காணவில்லை. 
45 பவுன் நகை
மேலும் சோனியா காந்தியின் வசம் இருந்த ரூ.13 லட்சம் ரொக்கம், 45 பவுன் நகைகள் மற்றும் வீட்டின் முன் நிறுத்தியிருந்த ஒரு காரும் மாயமாகி இருந்தது. பின்னர் சோனியா காந்தியை பல இடங்களில் மோகன்ராஜ் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. நகை, பணத்துடன் தாய், மகள் மாயமானார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என தெரியவில்லை.
இதுபற்றி மோகன்ராஜ் மார்த்தாண்டம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ஜான் வழக்குப் பதிவு செய்து சோனியா காந்தியையும், அவரது மகளையும் போலீசார் தேடி வருகிறார்கள்.
கார், பணம் மற்றும் நகைகளுடன் தாயும், மகளும் மாயமான சம்பவம் மார்த்தாண்டம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்