சேலம் மாநகராட்சி பகுதியில் கூடுதலாக ‘நகருக்குள் வனம்' அமைக்க நடவடிக்கை ஆணையாளர் கிறிஸ்துராஜ் தகவல்

சேலம் மாநகராட்சி பகுதியில் கூடுதலாக ‘நகருக்குள் வனம்' அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று ஆணையாளர் கிறிஸ்துராஜ் கூறினார்.

Update: 2021-08-20 21:13 GMT
சேலம்,
நகருக்குள் வனம்
சேலம் மாநகராட்சி சூரமங்கலம் மண்டலத்திற்குட்பட்ட பி.கே.எஸ். நகர் பகுதியில் ‘நகருக்குள் வனம்' அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த பணியை ஆணையாளர் கிறிஸ்துராஜ் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார். அப்போது அவர் கூறியதாவது:-
இந்த பகுதியில் 21 ஆயிரம் சதுர அடியில் ‘நகருக்குள் வனம்' அமைக்கப்படுகிறது. இதற்காக முதல் கட்டமாக நிலம் சமன்படுத்தப்படுகிறது. மேலும் இங்கு உள்ள மண்ணின் வளத்திற்கு ஏற்ப மரங்கள் நடப்பட்டு அவைகள் முறையாக பராமரிக்கப்படும்.
இடங்கள் தேர்வு
இதேபோன்று அபிராமி கார்டனில் 9 ஆயிரம் சதுர அடி, அரியாகவுண்டன்பட்டியில் 22 ஆயிரம் சதுரடி, போடிநாயக்கன்பட்டியில் 10 ஆயிரம் சதுர அடி பரப்பில் ‘நகருக்குள் வனம்' அமைப்பதற்காக ஏற்கனவே இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அதன்படி சேலம் மாநகராட்சி பகுதியை பசுமை படுத்துதல், சுற்றுச்சூழல் பாதுகாத்தல், நிலத்தடி நீர் மேம்பாடு ஆகிய பணிகள் தீவிரப்படுத்தப்படும்.
மேலும் தனியார் பங்களிப்புடன் கூடுதலாக ‘நகருக்குள் வனம்' அமைக்கப்படும். இதற்காக மாநகராட்சி பகுதியில் பல்வேறு இடங்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. தேர்வு செய்யப்பட்ட இடங்களில் மண்ணின் தன்மை மற்றும் தட்ப வெப்ப நிலைக்கேற்ப நன்கு வளரக்கூடிய மரங்கள் நட்டு பராமரிக்கப்படும்.  
 இவ்வாறு அவர் கூறினார்.
குப்பைகள் சேகரிக்கும் பணி
முன்னதாக கே.எஸ்.வி.நகர் சாஸ்தா தெருவில் மின்கல ஆட்டோ மூலம் வீடு, வீடாகச்சென்று குப்பைகள் சேகரிக்கும் பணியை பார்வையிட்டு ஆய்வு நடத்தினார். தொடர்ந்து அந்த பகுதியில் உள்ள சாக்கடை கால்வாய்கள் சுத்தம் செய்யப்படுகிறதா? குப்பைகள் அப்புறப்படுத்தப்படுகிறதா? என்பதையும் ஆய்வு நடத்தினார்.
ஆய்வின் போது மாநகர நல அலுவலர் யோகானந்த், உதவி ஆணையாளர் ராம்மோகன் ஆகியோர் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்