ஆசிரியையை அரிவாளால் வெட்டி 9 பவுன் நகை பறிப்பு

குமாரபுரம் அருகே கால்வாயில் குளித்துக் கொண்டிருந்த ஆசிரியையை அரிவாளால் வெட்டி 9 பவுன் நகையை பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

Update: 2021-08-20 21:10 GMT
பத்மநாபபுரம், 
குமாரபுரம் அருகே கால்வாயில் குளித்துக் கொண்டிருந்த ஆசிரியையை அரிவாளால் வெட்டி 9 பவுன் நகையை பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
ஆசிரியை
குமரி மாவட்டம் குமாரபுரம் அருகே காயகரை பகுதியை சேர்ந்தவர் அருள்தாஸ் (வயது 54), தொழிலாளி. இவருடைய மனைவி ராணி (52). இவர் மணலிகரை பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். 
நேற்று முன்தினம் மாலையில் வீட்டின் அருகில் உள்ள பத்மநாபபுரம் புத்தனாறு கால்வாயில் ராணி குளிப்பதற்காக சென்றார். 
நகை பறிப்பு
அதன் பின்னா் அவர் கால்வாய்க்குள் இறங்கி குளித்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் 2 வாலிபர்கள் வந்தனர். மோட்டார் சைக்கிளின் பின்னால் அமர்ந்திருந்த வாலிபர் கீழே இறங்கி, கால்வாய்க்குள் குளித்துக் கொண்டிருந்த ராணியை திடீரென அரிவாளால் சரமாரியாக வெட்டினார். இதனால் வலி தாங்க முடியாமல் ராணி அலறினார். அவரது அலறல் சத்தம் கேட்டு வீட்டில் இருந்த அவரது கணவர் அருள்தாஸ் ஓடி வந்தார்.
ஆனால் அதற்குள் அந்த வாலிபர், ராணி அணிந்திருந்த 9 பவுன் நகையை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் மோட்டார் சைக்கிளில் தயாராக நின்ற கூட்டாளியுடன் தப்பி சென்றார். பின்னர், ரத்த வெள்ளத்தில் படுகாயங்களுடன் இருந்த மனைவியை, அருள்தாஸ் மீட்டு சிகிச்சைக்காக நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பரபரப்பு
மேலும் இதுகுறித்து அருள்தாஸ் கொடுத்த புகாரின் பேரில் கொற்றிக்கோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்த துணிகர சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர். மேலும், அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கைப்பற்றி நகை பறிப்பில் ஈடுபட்ட நபர்கள் யார்? என விசாரணை நடத்தி வருகின்றனர்.
கால்வாயில் குளித்துக்கொண்டிருந்த ஆசிரியையை அரிவாளால் வெட்டி நகையை பறித்துச் சென்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்