காட்டுப்பன்றியை வேட்டையாட போட்டிருந்த நாட்டு வெடியை கடித்து பசுமாடு பலி

நாட்டு வெடியை கடித்து பசுமாடு பலியானது.

Update: 2021-08-20 20:19 GMT
தாளவாடி அடுத்த மல்லன்குழி கிராமத்தை சேர்ந்தவர் மாதேவப்பா (வயது 60). விவசாயி. இவர் 3 பசுமாடுகள் வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் அந்த பகுதியில் இருந்த மேய்ச்சல் நிலத்தில் மாடுகள் மேய்ந்துகொண்டு இருந்தன. அப்போது தரையில் கிடந்த நாட்டு வெடியை பசுமாடு ஒன்று தெரியாமல் கடித்துவிட்டது. இதனால் மாட்டின் வாய் பகுதி கிழிந்து ரத்தம் வழிய துடிதுடித்து செத்துவிட்டது. யாரோ காட்டுப்பன்றியை வேட்டையாட நாட்டு வெடியை போட்டு வைத்திருந்தது தெரிந்தது. இதுபோன்ற சம்பவங்கள் இந்த பகுதியில் அடிக்கடி நடந்து வருகின்றன. அதனால் இதுகுறித்து மாதேவப்பா தாளவாடி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் மரியபுரம் கிராமத்தை சேர்ந்த அமல்ராஜ் (51) என்பவர் காட்டுப்பன்றியை வேட்டையாட நாட்டு வெடியை போட்டு வைத்திருந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அமல்ராஜை போலீசார் கைது செய்தார்கள்.  மேலும் அவரிடம் இருந்து 4 நாட்டு வெடிகளையும் பறிமுதல் செய்தார்கள். 

மேலும் செய்திகள்