கோவில் முன்பு நடந்த திருமணங்கள்

பக்தர்கள் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டதால் கோவில் முன்பு திருமணங்கள் நடைபெற்றன.;

Update: 2021-08-20 20:13 GMT
தஞ்சாவூர்:
பக்தர்கள் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டதால் கோவில் முன்பு திருமணங்கள் நடைபெற்றன.
வழிபாட்டிற்கு தடை
தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் சூழலில் வருகிற 23-ந்தேதி வரை ஊரடங்கு தளர்வுகளுடன் நீட்டிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அதிகஅளவில் பொதுமக்கள் ஒரே இடத்தில் ஒரே நேரத்தில் கூட்டம் கூடுவதை தவிர்க்கும் வகையில் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அனைத்து மத வழிபாட்டு தலங்களிலும் பொதுமக்கள் வழிபாட்டிற்கு தமிழகஅரசு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த தடையின் எதிரொலியாக தஞ்சை மாவட்டத்தில் பிரதான கோவில்கள் அனைத்திலும் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படாமல் கோவில்களின் நுழைவுவாயில் கதவுகள் அடைக்கப்பட்டன. இதன்காரணமாக பக்தர்கள் சாலையோரத்தில் நின்றபடியே சாமி தரிசனம் செய்துவிட்டு சென்றனர். ஆகமவிதிப்படி வழக்கமான அலங்காரங்களும், பூஜைகளும் நடைபெற்றன.
திருமணங்கள்
தஞ்சை பெரியகோவில், பூக்கார தெரு சுப்பிரமணியசாமி கோவில், மேலவீதி மூலைஅனுமார் கோவில், சங்கரநாராயணசாமி கோவில், புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் உள்ளிட்ட மாவட்டத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் பக்தர்கள் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டன. தஞ்சை மாநகரில் உள்ள சில சிறு கோவில்கள் திறக்கப்பட்டு பக்தர்களுக்கு தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டது.
நேற்று முகூர்த்த தினம் என்பதால் தஞ்சை மாநகரில் ஏராளமான திருமணங்கள் நடைபெற்றன. புன்னைநல்லூர் மாரியம்மன்கோவிலில் வழக்கமாக திருமணங்கள் நடைபெறும். ஆனால் பக்தர்களுக்கு தடை காரணமாக கோவில் உள்ளே யாரையும் அனுமதிக்கவில்லை. இதன்காரணமாக கோவிலுக்கு வெளியே எளிமையான முறையில் பல திருமணங்கள் நடைபெற்றன. நெருங்கிய உறவினர்களுடன் மட்டும் வந்து மணமக்கள் மாலையை மாற்றி கொண்டு, கோவில் முன் நின்றபடியே மணமகள் கழுத்தில் மணமகன் தாலியை கட்டினார்.
பூக்கள் விலை உயர்வு
முகூர்த்த தினம் மற்றும் வரலட்சுமி விரதம் என்பதால் பூக்களின் விலையும் அதிகரித்து இருந்தது. ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூ.1,000-க்கு விற்பனையானது. இதேபோல் மற்ற பூக்களின் விலையும் அதிகமாக இருந்தது. மதியத்திற்கு பிறகு பூக்களின் விலை திடீரென குறைந்தது. தடையின் எதிரொலியாக தஞ்சை மாநகரில் உள்ள பள்ளிவாசல்களிலும் தொழுகை நடத்த இஸ்லாமியர்கள் அனுமதிக்கப்படவில்லை.

மேலும் செய்திகள்