பஞ்சாயத்து துணைத்தலைவர் படுகொலை
விருதுநகர் அருகே பஞ்சாயத்து துணைத்தலைவர் படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
விருதுநகர்,
விருதுநகர் அருகே பஞ்சாயத்து துணைத்தலைவர் படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
பஞ்சாயத்து துணைத்தலைவர்
விருதுநகர் மாவட்டம் வச்சக்காரப்பட்டி அருகே உள்ள தடங்கம் கிராமத்தை சேர்ந்தவர் அனந்தராமன் (வயது 46). இவர் கடந்த 2010 முதல் 2016-ம் ஆண்டு வரை வச்சக்காரப்பட்டி பஞ்சாயத்து தலைவராக இருந்தார். அதன் பின்னர் நடந்து முடிந்த பஞ்சாயத்து தேர்தலில் பஞ்சாயத்து தலைவர் பதவி, ஆதிதிராவிடர் பெண்ணுக்கு ஒதுக்கப்பட்டதால் ஜெயபாண்டி அம்மாள் என்பவர் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
இந்த தேர்தலில் ஜெயபாண்டி அம்மாளை எதிர்த்து அனந்தராமன் தனது ஆதரவாளரான சுந்தரியை நிறுத்தியிருந்தார். ஆனால் சுந்தரி வெற்றி வாய்ப்பை இழந்தார். அனந்தராமனும், அவரது மனைவி கலைச்செல்வியும் வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு போட்டியிட்டதில் அனந்தராமன் 8-வார்டு உறுப்பினராகவும், கலைச்செல்வி 6-வது வார்டு உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்தநிலையில் அனந்தராமன் வச்சக்காரப்பட்டி பஞ்சாயத்தின் துணைத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். நேற்று காலை அனந்தராமன் தன்னிடம் வேலை பார்த்து வந்த குருசாமி என்பவரது திருமணத்துக்காக பூசாரிப்பட்டி கிராமத்திற்கு தனது காரில் சென்றார்.
ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்
அப்போது தனது தாயார் ருக்மணி அம்மாளை(73) ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்வதற்காக அவரையும் தனது காரில் அழைத்து சென்றார். திருமண விழா நடந்த இடத்துக்கு சென்றதும் தாயாரை காரில் இருக்குமாறு கூறிவிட்டு, அனந்தராமன் திருமண விழாவுக்கு சென்று திரும்பினார்.
அவர் காரை நோக்கி நடந்து வந்து கொண்டிருந்த போது அங்குள்ள டீக்கடை அருகே 2 இருசக்கர வாகனத்தில் வந்த 4 பேர், அவரை வழிமறித்து சுற்றிவளைத்து சரமாரியாக வெட்டினர். உடனே அவர் அலறினார். இதை பார்த்து அவருடைய தாயார் ருக்மணி அம்மாள் உள்பட அந்த பகுதியில் நின்றவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஆனால், அந்த கும்பல் தாங்கள் வந்த வாகனங்களில் ஏறி அங்கிருந்து தப்பி சென்றனர். அனந்தராமன் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.
4 பேர் மீது வழக்கு
இதனால் திருமணம் நடந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மனோகர், துணை போலீஸ் சூப்பிரண்டு அருணாச்சலம், வச்சக்காரப்பட்டி போலீசார் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் குறித்து அனந்த ராமனின் தாயார் ருக்மணி அம்மாள் வச்சக்காரப்பட்டி போலீசில் புகார் செய்தார். அவர் புகாரில் கூறியிருப்பதாவது:-
அனந்தராமனுக்கு முன்பு வச்சகாரப்பட்டி பஞ்சாயத்து தலைவராக இருந்தவர் அந்த கிராமத்தை சேர்ந்த லட்சுமணன். அவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு ஆர்.ஆர்.நகரில் லாரி மோதி உயிரிழந்தார். அப்போது அனந்தராமன்தான், லட்சுமணன் மீது லாரிைய மோதி அவர் உயிரிழக்க காரணமாக இருந்ததாக லட்சுமணன் குடும்பத்தினர் கூறி வந்ததால் இவர்களுக்கிடையே முன்பகை இருந்து வந்தது. இந்தநிலையில்தான் லட்சுமணனின் உறவினர்களான மாரியப்பன், விஜயபாண்டி, முத்துராக்கு உள்பட 4 பேர் நேற்று திருமண வீட்டில் இருந்து திரும்பி வந்த அனந்தராமனை சுற்றிவளைத்து அரிவாளால் வெட்டி கொலை செய்துவிட்டு மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றுவிட்டனர்.
பஞ்சாயத்து தலைவர் ஜெயபாண்டி அம்மாள் கணவர் பாலமுருகனுக்கும், அனந்தராமனுக்கும் பஞ்சாயத்து நிர்வாகிப்பதில் கருத்து வேறுபாடு இருந்து வந்தது.
இவ்வாறு அந்த புகாரில் கூறப்பட்டுள்ளது.
புகார் இல்லை
இதனையொட்டி வச்சக்காரப்பட்டி போலீசார், லட்சுமணனின் சகோதரர் மாரியப்பன், விஜயபாண்டி, முத்துராக்கு உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.
இந்தநிலையில் போலீஸ் தரப்பில் லட்சுமணன் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு லாரி மோதி இறந்த சம்பவத்தை தொடர்ந்து அவரது குடும்பத்தினர் அனந்தராமன் மீது இதுவரை போலீஸ் நிலையத்தில் எந்தவித புகாரும் தரவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. மேலும் லட்சுமணனின் வீடும் கொலையுண்ட அனந்தராமனின் வீடும் அருகருகே உள்ளன.
இவர்களுக்கிடையே இதுவரை எந்த பிரச்சினையும் ஏற்பட்டதாக போலீசாருக்கு தகவல் இல்லை. மேலும் கொலை சம்பவம் நடந்த இடத்தின் அருகே இருந்த ஒரு மோட்டார் சைக்கிளை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தியதில் அந்த மோட்டார் சைக்கிள் லாரி மோதி இறந்த முன்னாள் பஞ்சாயத்து தலைவர் லட்சுமணனின் மகனின் மோட்டார் சைக்கிள் என தெரியவந்தது. போலீசார் அவரது வீட்டுக்கு சென்று சென்றபோது, வீடு பூட்டியிருந்ததாக சொல்லப்படுகிறது. எனினும் போலீசார் அனந்தராமன் கொலை சம்பவம் தொடர்பாக அவரது தாயார் ருக்மணியம்மாள் கொடுத்த புகார் மீது விசாரணை மேற்கொண்டாலும் வேறு பல கோணங்களிலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த வழக்கு தொடர்பாக போலீசார் தேடி வந்த 3 பேர் சிக்கியதாக கூறப்படுகிறது.