திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தரிசனம் செய்ய 3 நாட்கள் தடை
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தரிசனத்திற்கு நேற்று முதல் 3 நாட்கள் பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டது. இதனால் கோவில் வளாகம் வெறிச்சோடி காணப்பட்டது. தூண்டிகை விநாயகர் கோவில் முன்பு ஏராளமான திருமணங்கள் நடந்தன.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தரிசனத்திற்கு நேற்று முதல் 3 நாட்கள் பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டது. இதனால் கோவில் வளாகம் வெறிச்சோடி காணப்பட்டது. தூண்டிகை விநாயகர் கோவில் முன்பு ஏராளமான திருமணங்கள் நடந்தன.
தரிசனத்துக்கு தடை
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழக அரசு அனைத்து வழிபாட்டு தலங்களிலும் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாட்கள் பக்தர்கள் தரிசனத்திற்கு தடை விதித்தது. இதனால் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நேற்று முதல் 3 நாட்கள் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படவில்லை.
பக்தர்கள் கோவில் வளாகத்திற்குள் செல்ல முடியாதபடி வடக்கு, தெற்கு டோல்கேட் பகுதியிலும் மற்றும் அனுக்கிரக விலாசம் பகுதியிலும் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு போலீசார் மற்றும் கோவில் தனியார் நிறுவன பாதுகாவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இதனால் கோவில் வளாகம் பக்தர்களின்றி வெறிச்சோடி காணப்பட்டது.
ஆனால் கோவிலில் வழக்கம் போல் நடைபெறும் அனைத்து கால பூஜைகளும் நடந்தன.
திருமணம்
தமிழ் மாதம் ஆவணி வளர்பிறை முகூர்த்த தினமான நேற்று மண்டபங்கள், வீடுகள் போன்ற இடங்களில் ஏராளமான திருமணங்கள் நடந்தன.
அதேபோல் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் திருமணம் செய்ய பலர் ஏற்கனவே முடிவு செய்து இருந்தனர். ஆனால், கோவில் வளாகத்திற்குள் அனுமதி அளிக்காததால் நேற்று தூண்டிகை விநாயகர் கோவில் முன்பும், அனுக்கிரக விலாசத்தில் அமைக்கப்பட்டுள்ள தடுப்பு வேலிகள் முன்பும் திருமணங்கள் நடந்தன. திருமணத்திற்கு பின்னர் புதுமண தம்பதியினர் கோவில் வடக்கு டோல்கேட் அருகில் நின்று கோபுர தரிசனம் செய்துவிட்டு சென்றனர்.
மேலும், கடந்த 2 மாதங்களாக விதிக்கப்பட்ட தடை காரணமாக திருச்செந்தூர் கோவில் கடற்கரை பக்தர்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.