திருமண மண்டபங்களில் சிறப்பு குழுவினர் ஆய்வு
அருப்புக்கோட்டையில் திருமண மண்டபங்களில் சிறப்பு குழுவினர் ஆய்வு செய்தனர்.
அருப்புக்கோட்டை,
அருப்புக்கோட்டையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் வருவாய்த்துறை, போலீஸ் மற்றும் நகராட்சி சுகாதார துறை அதிகாரிகள் அடங்கிய சிறப்பு குழுவினை அமைத்து கலெக்டர் மேகநாத ரெட்டி உத்தரவிட்டுள்ளார். இந்த சிறப்பு குழுவினர் நகர் முழுவதும் ஆய்வு மேற்கொண்டு முக கவசம் அணியாதவர்களுக்கும், தனிமனித இடைவெளியை பின்பற்றாதவர்களுக்கும் அபராதம் விதித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று சுபமுகூர்த்த தினம் என்பதால் தாசில்தார் ரவிச்சந்திரன் தலைமையிலான கொரோனா தடுப்பு சிறப்பு ஆய்வு குழுவினர் சொக்கலிங்கபுரம், வெள்ளைகோட்டை, புளியம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் திருமண மண்டபங்களில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது முக கவசம் அணியாமலும், தனி மனித இடைவெளியை பின்பற்றாமல் முறையான கொரோனா பாதுகாப்பு வழிகாட்டுதலின்படி செயல்படாத 6 திருமண மண்டபங்களுக்கு தலா ரூ.ஆயிரம் வீதம் ரூ.6 ஆயிரம் அபராதம் விதித்தனர். மேலும் தொடர்ந்து விதிமுறைகளை பின்பற்றாமல் செயல்பட்டால் மண்டபத்திற்கு சீல் வைக்கப்படும் என அவர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.