குப்பையில் பற்றிய தீயால் பரபரப்பு
அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் குப்பையில் பற்றிய தீயால் பரபரப்பு ஏற்பட்டது.
அருப்புக்கோட்டை,
அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் நகர் பகுதி மக்கள் மட்டுமின்றி சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் உள்நோயாளிகளாகவும், புறநோயாளிகளாகவும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த அரசு மருத்துவமனையில் ஒரு குப்பை தொட்டி கூட கிடையாது. இங்கு சேரும் குப்பைகளை ஊழியர்கள் மருத்துவமனையை ஒட்டிச்செல்லும் ஓடையில் கொட்டுகின்றனர். இந்நிலையில் நேற்று மருத்துவமனையின் உள்ளே அறுவை சிகிக்சை அரங்கை ஒட்டிச்செல்லும் ஓடையில் கொட்டப்பட்டிருந்த குப்பையில் திடீரென தீப்பற்றி எரிந்தது. இதனால் மருத்துவமனை வளாகம் முழுவதும் புகை மூட்டம் சூழ்ந்தது. இதனால் நோயாளிகளுக்கு மூச்சுத்திணறல் ஏற்படும் சூழல் ஏற்பட்டது. மேலும் அப்பகுதியில் மின் வயர்களும் சென்றதால் பெரும் விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டது. இதுபற்றி தகவல் தெரிந்து விரைந்து வந்த அருப்புக்கோட்டை தீயணைப்பு நிலைய அலுவர் ஜெயபாண்டி தலைமையிலான தீயணைப்பு துறையினர், பற்றி எரிந்த குப்பையின் மீது தண்ணீரை பீச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். மருத்துவமனையை ஒட்டி தீ பற்றி எரிந்ததால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.