துணிக்கடையில் திருடியவர் கைது

ஏர்வாடியில் துணிக்கடையில் திருடியவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2021-08-20 19:15 GMT
ஏர்வாடி:

நெல்லை மாவட்டம் ஏர்வாடி சேனையர் குல வெள்ளாளர் மேற்கு தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணியன் மகன் நல்லமுத்து (வயது 38). இவர் ஏர்வாடி நம்பியாற்று பாலம் அருகே துணிக்கடை நடத்தி வருகிறார். கடந்த 13-ந் தேதி நல்லமுத்து தனது உறவினர் விஜய் என்பவரிடம் கடையை பார்த்துக் கொள்ளும்படி கூறிவிட்டு வெளியில் சென்று விட்டார். அப்போது கோவை மாவட்டம், சூலூர் தாலுகா நல்லக்கவுண்டன்பாளையத்தை சேர்ந்தவரும், தற்போது ஏர்வாடி சேசையாபுரம் வடக்குத்தெருவில் வசிப்பவருமான சிங்காரம் மகன் முத்தையா என்பவர் கடைக்கு வந்து ஒரு பேண்ட், ஒரு சட்டை எடுத்தார். மேலும் அவர் கடை ஊழியர்களுக்கு தெரியாமல் ரூ.1,100 மதிப்புள்ள ஒரு பேண்ட், ஒரு டீ-சர்ட் ஆகியவற்றை திருடி சென்று விட்டார். 

பின்னர் கடையில் இருப்பு துணிகளை கணக்கீடு செய்தபோது, பேண்ட், டீ-சர்ட் திருடப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து நல்லமுத்து கடையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தார். அப்போது முத்தையா துணிகள் திருடிய காட்சிகள் பதிவாகி இருந்தது தெரியவந்தது.

இந்நிலையில் சம்பவத்தன்று முத்தையா ஏர்வாடி பஜாரில் சென்றதை பார்த்த நல்லமுத்து அவரை பிடித்து ஏர்வாடி போலீசில் ஒப்படைத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து, முத்தையாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்