மோகனூர் போலீஸ் நிலையம் அருகே தீக்குளிக்க முயன்ற தந்தை, மகன் கைது
மோகனூர் போலீஸ் நிலையம் அருகே தீக்குளிக்க முயன்ற தந்தை, மகனை போலீசார் கைது செய்தனர்.
மோகனூர்:
தகராறு
மோகனூரை அடுத்த குமரிபாளையம் ஊராட்சி ஓடப்பாளையத்தை சேர்ந்தவர் வேலுசாமி (வயது 64). இவருக்கு இளையராஜா (34), சத்யராஜ் என 2 மகன்கள் உள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு வேலுசாமி, 2 மகன்களுக்கும் தனது நிலத்தை பிரித்து கொடுத்தார். இதில் சத்யராஜ் தனக்கு வழங்கப்பட்ட நிலத்தை வேறொரு நபருக்கு விற்பனை செய்து விட்டு, வெளிநாடு சென்று விட்டார். இதனிடையே வேலுசாமி, இளையராஜா ஆகியோர் அந்த நிலத்துக்கு செல்லும் தண்ணீர் குழாய்களை உடைத்து தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின்பேரில் மோகனூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு வேலுசாமி, இளையராஜா ஆகியோர் மோகனூர் போலீஸ் நிலையம் அருகே உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றுள்ளனர். இதனை சுபாஷ் சங்கர் (23) என்பவர் வீடியோ எடுத்து கொண்டிருந்தார். அப்போது அங்கிருந்த போலீசார் மற்றும் தமிழ் புலிகள் கட்சியின் மோகனூர் ஒன்றிய செயலாளர் செல்வராஜ் (38) ஆகியோர் விரைந்து சென்று, தந்தை, மகனை தீக்குளிக்க விடாமல் தடுத்தனர்.
தந்தை, மகன் கைது
இதையடுத்து போலீசார் அவர்கள் 2 பேரிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள், நிலப்பிரச்சினை தீர போலீஸ் நிலையம் அருகே தீக்குளிப்பது போல் நடிக்க வேண்டும் என்று தமிழ் புலிகள் கட்சி ஒன்றிய செயலாளர் செல்வராஜ் கூறியதாக தெரிவித்தனர்.
இதையடுத்து போலீசார் தீக்குளிக்க முயன்றதாக வழக்குப்பதிவு செய்து வேலுசாமி, இளையராஜாவை கைது செய்தனர். மேலும் அவர்களை தற்கொலை செய்து கொள்ள தூண்டியதாக செல்வராஜ், சுபாஷ் சங்கர் ஆகியோரை கைது செய்தனர். பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி நாமக்கல் கிளை சிறையில் அடைத்தனர்.