வரலட்சுமி நோன்பையொட்டி கோவில்களில் வழிபாடு

கோபியில் வரலட்சுமி நோன்பையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

Update: 2021-08-20 18:05 GMT
கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டு வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய கிழமைகளில் கோவில்கள் நடை சாத்தப்படும் என்று ஈரோடு மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி வெள்ளிக்கிழமையான நேற்று வரலட்சுமி நோன்பை முன்னிட்டு பக்தர்கள் கோபி அருகே உள்ள பிரசித்தி பெற்ற பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோவிலுக்கு தரிசனம் செய்ய வந்தனர்.
ஆனால் கோவில் நடை சாத்தப்பட்டு் இருந்ததால் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். கோவிலில் வழக்கமான பூஜைகள் மட்டும் நடந்தன. சிறிய கோவில்கள் மட்டும் திறந்திருந்தன. கோபி சாரதா மாரியம்மன் கோவிலும் நடை அடைக்கப்பட்டு இருந்ததால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
மேலும் நேற்று முகூர்த்த தினமாக இருந்ததால் பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோவில் ராஜகோபுரத்திற்கு முன்பு உள்ள விநாயகர் கோவிலில் திருமணம் நடந்தது. அதிகாலை 4.30 மணி அளவில் சமூக இடைவெளியை பின்பற்றி 5 திருமணங்கள் நடந்தது.
இதேபோல் கோபி டவுன் வடக்கு வீதியில் பெரம்பலூர் முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு நேற்று வரலட்சுமி நோன்பை முன்னிட்டு முத்துமாரி அம்மனுக்கு அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட்டது. பின்னர் மஞ்சள் கயிறு மற்றும் மலர் அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காட்டப்பட்டது. இதில் அப்பகுதியை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். பூஜையின் முடிவில் அனைவருக்கும் தாலி சரடு, வளையல்கள், பிரசாதம் வழங்கப்பட்டது.

மேலும் செய்திகள்