ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை முயற்சி

வீட்டை அபகரித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவத்தினால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2021-08-20 17:58 GMT
விழுப்புரம், 

மேல்மலையனூர் தாலுகா சிறுதலைப்பூண்டி கிராமத்தை சேர்ந்த நடராஜன், அவரது மனைவி ராஜகுமாரி, மகன் வெங்கடேசன் ஆகிய 3 பேரும் நேற்று மதியம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு வந்தனர். அங்குள்ள நுழைவுவாயில் முன்பு வந்த அவர்கள் 3 பேரும் தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்து திடீரென தாங்கள் கொண்டு வந்திருந்த மண்எண்ணெய் கேனை எடுத்து திறந்து தங்கள் மீது ஊற்றிக்கொள்ள முயன்றனர்.
இதை சற்றும் எதிர்பாராத அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் விரைந்து சென்று அவர்கள் 3 பேரையும் தடுத்து நிறுத்தி அவர்களிடமிருந்த மண்எண்ணெய் கேன், தீப்பெட்டியை பிடுங்கினர். பின்னர் அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணை

அப்போது நடராஜன் கூறுகையில், நான் மேல்மலையனூரை சேர்ந்த பெண் ஒருவரிடம் ரூ.4 லட்சம் கடன் வாங்கினேன். அந்த கடனுக்காக எனது கல்வி அறியாமையை பயன்படுத்தி அடமானம் என்று சொல்லி எனது வீட்டை கிரையம் செய்ததோடு மட்டுமல்லாமல் இதற்கு நியாயம் கேட்கச்சென்ற என்னை அவரது தரப்பினர் தகாத வார்த்தையால் திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். இது தொடர்பாக வளத்தி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.  இதனிடையே நாங்கள் கொடுத்த புகாரை வாபஸ் பெறச்சொல்லி அவர்கள், எங்கள் குடும்பத்தினருக்கு மிரட்டல் விடுத்து வருகின்றனர். எனவே அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
இதை கேட்டறிந்த போலீசார், இதுகுறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினர். மேலும் அரசு அலுவலகங்கள் முன்பு இதுபோன்ற அசம்பாவித செயலில் ஈடுபடக்கூடாது என்று அவர்களை எச்சரித்து அங்கிருந்து போலீசார் அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்