கோவிலுக்கு வெளியே நின்று பக்தர்கள் தரிசனம்
கொரோனா கட்டுப்பாடு காரணமாக நீலகிரியில் 3 நாட்கள் வழிபாட்டு தலங்கள் மூடப்படுகிறது. கோவிலுக்கு வெளியே நின்று பக்தர்கள் தரிசனம் செய்தனர்.பள்ளிவாசல்களில் தொழுகை நடைபெறவில்லை.
ஊட்டி,
கொரோனா கட்டுப்பாடு காரணமாக நீலகிரியில் 3 நாட்கள் வழிபாட்டு தலங்கள் மூடப்படுகிறது. கோவிலுக்கு வெளியே நின்று பக்தர்கள் தரிசனம் செய்தனர்.பள்ளிவாசல்களில் தொழுகை நடைபெறவில்லை.
தரிசனத்துக்கு தடை
தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. தொற்று பரவுவதை கட்டுப்படுத்த அதிகளவில் பொதுமக்கள் ஒரே இடத்தில் ஒரே நேரத்தில் கூடுவதை தவிர்க்கும் வகையில் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அனைத்து மத வழிபாட்டு தலங்களிலும் தரிசனத்துக்கு மட்டும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.
இந்த உத்தரவு 2-வது வாரமாக நேற்று முதல் கடைபிடிக்கப்பட்டது. வெள்ளிக்கிழமையான நேற்று, இன்று (சனிக்கிழமை), நாளை (ஞாயிற்றுக்கிழமை) 3 நாட்கள் நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி மாரியம்மன் கோவில் உள்பட அனைத்து வழிபாட்டு தலங்களும் மூடப்பட்டு உள்ளது.
கோவிலுக்கு வெளியே...
கடந்த வாரம் 3 நாட்கள் மூடப்பட்ட பின்னர் 16-ந் தேதி முதல் கோவில்கள் திறக்கப்பட்டு, பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். சமூக இடைவெளியை கடைபிடித்தும், முககவசம் அணிந்தும் சாமி தரிசனம் செய்தனர். நேற்று முதல் 3 நாட்கள் கோவில்களுக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.
உள் வளாகத்தில் பூசாரிகள் மூலம் ஆகம விதிகளின்படி அனைத்து கால பூஜைகள் நடைபெற்றது. பக்தர்கள் கோவிலுக்கு வெளியே நின்றபடி சாமி தரிசனம் செய்து விட்டு சென்றனர். அங்கு திருநீறு வைக்கப்பட்டு இருந்தது.
தொழுகை இல்லை
இதேபோல் ஊட்டி எல்க்ஹில் முருகன் கோவில், சுப்பிரமணிய சுவாமி கோவில், வேணுகோபால சுவாமி கோவில், இரட்டை பிள்ளையார் கோவில் உள்பட இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கோவில்களிலும் நடை சாத்தப்பட்டு உள்ளது.
இதனால் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய முடியாமல் சென்றனர். வெள்ளிக்கிழமைகளில் பள்ளிவாசல்களில் தொழுகை நடைபெறுவது வழக்கம். கொரோனா கட்டுப்பாடு காரணமாக பள்ளிவாசல்கள் மூடப்பட்டதால், நேற்று தொழுகை நடத்தப்படவில்லை.