புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
நொய்யல் அருகே திருமணமான 2 மாதத்தில் புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கோட்டாட்சியர் விசாரணை நடத்த உள்ளார்.
நொய்யல்
புதுப்பெண்
சேலம் பொன்னம்மாப்பேட்டை ராமமூர்த்திபுதூரை சேர்ந்தவர் ராமமூர்த்தி. இவரது மகள் ஏஞ்சலின் சரோஜினி (வயது 23). இவரை, திருநெல்வேலி மாவட்டம் நரசிங்கநல்லூர் காமாட்சி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த ஏகம்பன் மகன் சீனிவாசபெருமாள் என்பவர் கடந்த ஜூன் மாதம் 23-ந்தேதி திருமணம் செய்து கொண்டார்.
பின்னர் சீனிவாசபெருமாள் தனது மனைவி ஏஞ்சலின் சரோஜினியுடன் கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் அருகே முல்லை நகரில் வாடகை வீட்டில் கடந்த 2 மாதங்களாக குடும்பம் நடத்தி வந்தார். சீனிவாசபெருமாள் புகளூர் காகித ஆலையில் கடந்த 3 ஆண்டுகளாக பிட்டராக வேலை பார்த்து வருகிறார்.
தற்கொலை
இந்நிலையில் சீனிவாசபெருமாள் நேற்று காலை வழக்கம்போல் வேலைக்கு சென்றுவிட்டு மதியம் சாப்பிடுவதற்காக வீட்டிற்கு வந்தார். அப்போது ஏஞ்சலின் சரோஜினி கதவை உள்பக்கமாக தாழிட்டிருந்தார். அதனால் சீனிவாசபெருமாள் பலமுறை காலிங் பெல்லை அடித்தும் கதவு திறக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவர் படுக்கை அறை ஜன்னல் கண்ணாடியை உடைத்து உள்ளே பார்த்தார். அப்போது அறைக்குள் இருந்த மின்விசிறியில் சேலையால் தூக்கு மாட்டிக்கொண்டு இறந்த நிலையில் ஏஞ்சலின்சரோஜினி தொங்கி கொண்டிருந்தார்.
இதனால் அதிர்ச்சியடைந்த சீனிவாசபெருமாள் அக்கம், பக்கத்தினரை அழைத்து கதவை உடைத்து உள்ளே சென்று ஏஞ்சலின் சரோஜினியை கீழே இறக்கி வேலாயுதம்பாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தார்.
பெற்றோர் கதறல்
இதையடுத்து மருத்துவமனையில் ஏஞ்சலின் சரோஜினியை பரிசோதனை டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து ஏஞ்சலின் சரோஜினியின் பெற்றோர்களுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அவர்கள் மருத்துவமனைக்கு வந்து மகளின் உடலை பார்த்து கதறி அழுதனர்.
இதுகுறித்து ஏஞ்சலின் சரோஜினியின் தாய் வள்ளிநாயகி கொடுத்த புகாரின்பேரில், வேலாயுதம்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நெப்போலியன் வழக்குப்பதிவு செய்தார். பின்னர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்.
மேலும், திருமணமாகி 2 மாதத்தில் ஏஞ்சலின் சரோஜினி எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என இன்று கரூர் வருவாய்கோட்டாட்சியர் பாலசுப்பிரமணியம் விசாரணை நடத்த உள்ளார்.