பெண்ணிடம் 4 பவுன் தங்கசங்கிலி பறிப்பு
ராமநாதபுரம் புதிய பஸ்நிலையத்தில் நாளுக்கு நாள் பயணிகளிடம் நகை பறிப்பு சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் பெண் ஒருவரிடம் 4 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்றுவிட்டனர்.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் புதிய பஸ்நிலையத்தில் நாளுக்கு நாள் பயணிகளிடம் நகை பறிப்பு சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் பெண் ஒருவரிடம் 4 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்றுவிட்டனர்.
கூட்ட நெரிசல்
ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் தெற்குவாடி புதுத் தெருவை சேர்ந்தவர் பூமாதேவி (வயது30). இவர் தனது சொந்த ஊரான மானாமதுரைக்கு செல்வதற்காக குழந்தைகளுடன் தெற்குவாடியில் இருந்து ராமநாதபுரம் வந்துள்ளார். புதிய பஸ்நிலையத்தில் மதுரை செல்லும் பஸ்சில் கூட்ட நெரிசலில் ஏறி உட்கார்ந்ததும் தான் கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் தங்க சங்கிலியை பார்த்தபோது காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
கூட்ட நெரிசலை பயன்படுத்தி யாரோ திருடிச் சென்றிருக் கலாம் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து பூமாதேவி அளித்த புகாரின் அடிப்படையில் ராமநாதபுரம் கேணிக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
ராமநாதபுரம் புதிய பஸ் நிலையத்தில் சமீப காலமாக பயணிகளிடம் கூட்ட நெரிசலை பயன்படுத்தி தங்க சங்கிலி திருட்டு அதிகரித்து வருகிறது. பஸ் நிலையத்தில் திருட்டு கும்பல் நடமாட்டம் அதிகரித்து வருவதே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.
கைவரிசை
பஸ்நிலையத்தில் உள்ள புறக்காவல் நிலையம் அடைக்கப் பட்டு செயல்படாமல் உள்ளதே போலீசார் அச்சமின்றி திருடர்கள் தங்கள் கைவரிசையை காட்டி வருகின்றனர். எனவே, புறக்காவல் நிலையத்தினை பயன்பாட்டிற்கு கொண்டுவந்து போலீசார் சுழற்சி அடிப்படையில் நியமித்து பயணிகளின் அச்சத்தை போக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.