அதிகாலையிலேயே ஆயிரக்கணக்கானவர்கள் திரண்டனர்: திருமண விழாக்களால் மீண்டும் களைக்கட்டியது தேவநாதசுவாமி கோவில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் காற்றில் பறந்தது
திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவில், நேற்று திருமண விழாக்களால் மீண்டும் களைக்கட்டியது. கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை காற்றில் பறக்கவிட்டு,அதிகாலையிலேயே ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டனர்.
நெல்லிக்குப்பம்,
கடலூர் திருவந்திபுரத்தில் பிரசித்தி பெற்ற தேவநாதசுவாமி கோவில் அமைந்துள்ளது. கொரோனா கட்டுப்பாட்டு நெறிமுறைகளை பின்பற்றும் வகையில், வாரத்தில் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கோவில் நடை சாத்தப்பட்டு, பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவதில்லை.
மேலும் இந்த கோவிலில் வழக்கமாக அதிகளவில் திருமணங்கள் நடைபெறும். கொரோனா பெருந்தொற்று காலம் என்பதால், கோவிலுக்குள் திருமணங்கள் நடத்தவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் கடந்த வைகாசி, ஆனி ஆகிய மாதங்களில் வந்த முகூர்த்த நாட்களில், திருமண தம்பதிகள் கோவில் முன்பு வந்து சாலையில் நின்றபடி திருமணம் செய்து கொண்டனர்.
கோவில் முன்பு வைத்து திருமணம்
இதுபோன்ற சூழலில் கடந்த ஆடி மாதத்தில் முகூர்த்த நாட்கள் ஏதும் இல்லாததால், திருமணங்கள் ஏதும் நடைபெறவில்லை. இந்த நிலையில் தற்போது ஆவணி மாதம் பிறந்து, நேற்று முதல் முகூர்த்த நாள் என்பதால், கோவில் பகுதி மீண்டும் களைக்கட்ட தொடங்கியது.
கோவில் முன்பு நேற்று அதிகாலையிலேயே ஏராளமான திருமணங்கள் நடைபெற்றன. புதுமண ஜோடிகள் தங்களது சொந்தங்களுடன் வந்து, சாலையில் நின்றபடி, தேவநாதசுவாமியின் கோபுரத்தை வணங்கி திருமணம் செய்து கொண்டனர்.
நேற்று ஒரே நாளில் 90-க்கும் மேற்பட்ட ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற்றது. அதேபோல் கோவிலை சுற்றியுள்ள மண்டபங்களில் 60-க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடைபெற்றது.
இதனால் கோவில் முன்புள்ள சாலையில் திரும்பும் இடமெல்லாம் மணக்கோலத்தில் மணமக்கள் நின்று இருந்ததை பார்க்க முடிந்தது. அதோடு திருவந்திபுரம் பகுதியில் கடுமையான வாகன நெரிசல் காண்பட்டது. இதனால் திருமண ஜோடிகள் பலர் மோட்டார் சைக்கிளில் சென்றனர்.
பெருந்தொற்று விலகவில்லை
தேவநாதசுவாமி கோவில் முன்புள்ள சாலை குறுகலான சாலையாகும். இருபுறங்களில் கடைகள் நிறைந்து நெருக்கடி மிகுந்த பகுதி. இந்த இடத்தில் ஒரே நேரத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் குவிந்து இருந்தனர்.
கொரோனா பெருந்தொற்று இன்னும் நம்மை விட்டு விலகிவிடவில்லை.
தொற்று பரவலை தடுக்க அரசு எடுக்கும் நடவடிக்கை ஒருபுறம் இருந்தாலும், மக்களின் ஒத்துழைப்பும் அவசியம். ஆனால் அத்தனையையும் மறந்து, தனிமனித இடைவெளி எதையும் கடைபிடிக்காமல் மக்கள் அதிகளவில் குவிந்து இருந்தனர்.
இதில் பலரும் முக கவசம் அணியாமலே இருந்தனர். இதில் போக்குவரத்து நெரிசலை சரிசெய்யும் பணியில் இருந்த போலீசாரில் ஒருசிலரும் முக கவசம் அணியாமலே இருந்தனர்.
உரிய திட்டமிடல் தேவை
கொரோனா பெருந்தொற்றை பொறுத்தவரை கடலூர் மாவட்டத்தில் தற்போது தான் சரிவை நோக்கி மெல்ல நகர்கிறது. அதற்கு மக்கள் அதிகளவில் ஒன்றுகூடாமல் இருந்ததும் ஒரு காரணமாகும்.
அந்த வகையில் கடந்த ஒரு மாதகாலம் (ஆடி) முகூர்த்த நாட்கள் ஏதும் இல்லாததால் இதுபோன்று கோவில்கள் முன்பு மக்களின் கூட்டத்தை காணமுடியவில்லை. ஆனால், ஆவணி மாதத்தில் நேற்று வந்த முதல் முகூர்த்த நாளிலேயே ஆயிரகணக்கானவர்கள் திரண்டனர்.
இந்த மாதத்தில் தொடர்ச்சியாக முகூர்த்த நாட்கள் வரும் என்பதால், இனி வரும் நாட்களில் உரிய திட்டமிடலுடன் ,கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு திருமணங்கள் நடைபெற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சமூக நலனின் அக்கறை கொண்டோர்களின் எதிர்பார்ப்பாகும்.