தேங்காய் பறிக்க நவீன எந்திரம்
பொள்ளாச்சி பகுதியில் தென்னை மரங்களில் இருந்து தேங்காய் பறிக்க நவீன எந்திரத்தை வேளாண் பொறியியல் துறை சார்பில் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.
நெகமம்
பொள்ளாச்சி பகுதியில் தென்னை மரங்களில் இருந்து தேங்காய் பறிக்க நவீன எந்திரத்தை வேளாண் பொறியியல் துறை சார்பில் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.
தென்னை மரங்கள்
தென்னை நகர் என்று அழைக்கப்படும் பொள்ளாச்சியில் ஏராளமான தென்னை மரங்கள் உள்ளன. பொள்ளாச்சி வடக்கு, தெற்கு, ஆனைமலை மற்றும் கிணத்துக்கடவு ஆகிய 4 ஒன்றியங் களில் மட்டும் 55 ஆயிரம் எக்டேரில் 2 கோடிக்கும் அதிகமான தென்னை மரங்கள் உள்ளன.
இங்கு உற்பத்தி செய்யப்படும் இளநீர் சுவை அதிகமாக இருப்பதால் பல இடங்களுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. அதுபோன்று கொப்பரை தேங்காய் மற்றும் தேங்காயும் பல இடங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
நவீன எந்திரம் அறிமுகம்
தென்னை மரங்கள் சராசரியாக 60 அடி உயரம் வரை வளர்ந்து உள்ளது. இதனால் அதில் ஏறி தேங்காய் பறிக்க ஆட்கள் கிடைப்பது இல்லை. இதனால் தென்னை சாகுபடி செய்து உள்ள விவசாயிகள் பெரிதும் சிரமப்பட்டு வருகிறார்கள்.
எனவே விவசாயிகளின் சிரமத்தை போக்க, தேங்காய் பறிக்க நவீன எந்திரத்தை அறிமுகப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. அதன்பேரில் தற்போது வேளாண் பொறியியல் துறை சார்பில் தேங்காய் பறிக்க நவீன எந்திரம் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
இந்த எந்திரம் குறித்து வேளாண் பொறியியல் துறையை சேர்ந்த அதிகாரிகள் கூறியதாவது:-
52 அடி உயரம்
மினிலாரியில் ஹைட்ராலிக் என்று அழைக்கப்படும் எந்திரம் 52 அடி உயரம் வரை செல்லும். அதன் மேல்பகுதியில் 2 பேர் நிற்பதற்கான வசதியுடன் ஒரு பெட்டி உள்ளது. இந்த எந்திரத்தை மேல்நோக்கி போக வைத்து அந்த பெட்டியில் நின்றபடி தென்னை மரங்களில் இருந்து தேங்காய்களை பறிக்கலாம்.
மேலும் இந்த பெட்டி 360 டிகிரியில் சுழலும் தன்மை கொண்டது என்பதால் ஒரு மரத்தில் பறித்து முடித்த பின்னர், அடுத்த மரத்துக்கு மிகவும் எளிதாக செல்லலாம். தற்போது இந்த எந்திரத்தை சோதனை அடிப்படையில் இயக்கி வருகிறோம்.
சோதனை
ஒரு மணி எத்தனை மரங்களில் இருந்து தேங்காய் பறிக்கலாம், ஒரு லிட்டர் டீசல் பயன்படுத்தினால் எத்தனை மணி நேரம் இந்த எந்திரத்தை உபயோகிக்கலாம் என்பது குறித்து ஆய்வு செய்யப் பட்டு வருகிறது. அதன் பின்னர்தான் வாடகை நிர்ணயம் செய்யப்படும்.
பொள்ளாச்சி வடக்கு, தெற்கு, கிணத்துக்கடவு மற்றும் ஆனை மலை ஆகிய 4 ஒன்றியங்களுக்கு 2 எந்திரங்கள் வழங்கப்பட்டு உள்ளன. சோதனை முடிந்ததும் அரசின் ஒப்புதல் பெற்று வாடகைக்கு விடப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.