கரூரில் ஜவுளி நிறுவன மேலாளர் வீட்டில் நகை, பணம் கொள்ளை
கரூரில் ஜவுளி நிறுவன மேலாளர் வீட்டில் நகை, பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
கரூர்
நகை-பணம் கொள்ளை
கரூர் வெங்கமேடு வி.வி.ஜி. நகரை சேர்ந்தவர் உதயகுமார் (வயது 45). இவர் ஜவுளி நிறுவனம் ஒன்றில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் எலவனூரில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டு நேற்று முன்தினம் உதயகுமார் வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு கிடந்தது.
இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டினுள் சென்று பார்த்தபோது பொருட்கள் சிதறி கிடந்தன. மேலும் பீரோவில் அவர் வைத்திருந்த 1¼ பவுன் தங்க நகை, சில்வர் கொலுசு, சில்வர் வளையம், ரூ.40 ஆயிரம் மற்றும் எல்.சி.டி.டிவி உள்ளிட்ட பொருட்களை மர்மநபர்களை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.
மர்மநபர்களுக்கு வலைவீச்சு
இதுகுறித்து உதயகுமார் வெங்கமேடு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உதயகுமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு ரேகைகள் பதிவு செய்யப்பட்டன. இந்த கொள்ளை சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிந்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். ஜவுளி நிறுவன மேலாளர் வீட்டில் கொள்ளை சம்பவம் நடந்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.