ஒரேநாளில் 3,600 பேருக்கு கொரோனா தடுப்பூசி
மாவட்டத்தில் ஒரே நாளில் 3,600 பேர் நீண்ட வரிசையில் நின்று கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.
கரூர்
கொரோனா தடுப்பூசி முகாம்
கரூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இந்த நிலையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது. இந்தநிலையில் நேற்று கரூர் நகராட்சிக்கு உட்பட்ட நகராட்சி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் ஆசிரியர்கள் மற்றும பள்ளியில் பணிபுரியும் பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
இதேபோல் சணப்பிரட்டி அரசு உயர்நிலை பள்ளி, குளித்தலை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர்கள் மற்றும் பள்ளிகளில் பணிபுரியக்கூடிய இதர பணியாளர்களும் தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.
குளித்தலை
இதேபோல் கிருஷ்ணராயபுரத்தில் வீரியம் பாளையம் பஞ்சாயத்து அலுவலகத்திலும், கடவூர் ஒன்றியம் சீத்தப்பட்டியில் அரசு தொடக்கப்பள்ளியிலும், அரவக்குறிச்சி சேந்தமங்கலத்தில் மேற்கு பஞ்சாயத்து அலுவலகத்திலும் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
கரூர் நகராட்சிக்கு உட்பட்ட பசுபதிபாளையம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், குளித்தலை நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
கரூர் மாவட்டத்தில் நேற்று ஒரேநாளில் மட்டும் மொத்தம் 3600 பேர் பல்வேறு மேற்கண்ட இடங்களில் சமூக இடைவெளியை கடைப்பிடித்தும், முகககவசம் அணிந்து நீண்ட வரிசையில் நின்று கொரோனா முதல் தவணை மற்றும் இரண்டாவது தவணை தடுப்பூசி போட்டு கொண்டனர்.
வேலாயுதம்பாளையம்
கரூர் ஒன்றியம், மண்மங்கலம் கிழக்கூர் அரசு தொடக்கப்பள்ளியில் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. முகாமில் வாங்கல் ஆரம்ப சுகாதார மருத்துவக்குழுவினர் மற்றும் செவிலியர்கள் கலந்து கொண்டு, 18 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள், பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள், மாற்றுத்திறனாளிளுக்கு முதல் மற்றும் இரண்டாம் தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தினர்.