100 அடி பள்ளத்தில் சுற்றுலா வேன் பாய்ந்து 17 பேர் படுகாயம்

கொடைக்கானல் மலைப்பாதையில், 100 அடி பள்ளத்தில் வேன் பாய்ந்து 17 பேர் படுகாயம் அடைந்தனர்.

Update: 2021-08-20 16:50 GMT
கொடைக்கானல்: 

பள்ளத்தில் பாய்ந்த வேன்
 கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே உள்ள முவாற்றுபுழா பகுதியை சேர்ந்த 17 பேர், ஓணம் பண்டிகையை கொண்டாடுவதற்காக ‘மலைகளின் இளவரசி’யான கொடைக்கானலுக்கு நேற்று காலையில் ஒரு வேனில் சுற்றுலா வந்தனர். இந்த வேனை, அதே ஊரை சேர்ந்த அப்சல் (வயது 24) என்பவர் ஓட்டினார். 


கொடைக்கானல்- பழனி மலைப்பாதையில் பிஎல் செட் அருகே, கும்பூர் வயல் என்னுமிடத்தில் வேன் வந்து கொண்டிருந்தது. அப்போது சாலையோர வளைவில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் சுமார் 100 அடி பள்ளத்தில் பாய்ந்தது.


இதனையடுத்து வேனில் இருந்தவர்கள் அலறினர். அந்த சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து அவர்களை மீட்டனர். 

  17 பேர் படுகாயம்
இந்த விபத்தில் வேனில் பயணம் செய்த பாதுசா (21), மாகின் (19), சமீம் (21), முகமது தாரிக் (21), ரகுமான் (21), அஸ்கர் (20) உள்பட 17 பேர் படுகாயமடைந்தனர். இவர்களுக்கு கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 


இதில் மேல்சிகிச்சைக்காக டிரைவர் அப்சல் மற்றும் பாதுஷா ஆகியோர் தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 


விபத்து குறித்து தகவல் அறிந்த போலீஸ் துணை சூப்பிரண்டு ஆத்மநாதன், இன்ஸ்பெக்டர் முத்து பிரேம்சந்த், சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணகுமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். மேலும் கொடைக்கானல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்