வரலட்சுமி விரதத்தையொட்டி அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு
வரலட்சுமி விரதத்தையொட்டி தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து அம்மன் கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
தர்மபுரி:
வரலட்சுமி விரதத்தையொட்டி தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து அம்மன் கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
வரலட்சுமி விரதம்
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து அம்மன் கோவில்களிலும் வரலட்சுமி விரதத்தையொட்டி நேற்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது. தர்மபுரி கோட்டை கல்யாண காமாட்சி அம்மன் கோவிலில் வரலட்சுமி விரதத்தையொட்டி அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. பின்னர் அம்மன் ஆதி காமாட்சி அம்மன் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதைத்தொடர்ந்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. இதில் விரதமிருந்த பெண்கள் பங்கேற்று அம்மனை வழிபட்டனர்.
இதேபோன்று பாரதிபுரம் ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் வரலட்சுமி விரதத்தையொட்டி சிறப்பு அபிஷேக ஆராதனையும், வழிபாடும் நடைபெற்றது. பின்னர் அம்மன் ஜமதகனீஸ்வரருடன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் பெண்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
வீடுகள் தோறும் வழிபாடு
இதேபோன்று தர்மபுரி குமாரசாமிப்பேட்டை மாரியம்மன் கோவில், கடைவீதி அம்பிகா பரமேஸ்வரி அம்மன் கோவில், நெசவாளர் நகர் ஓம்சக்தி மாரியம்மன் கோவில், அன்னசாகரம் மாரியம்மன் கோவில், மதிகோன்பாளையம் சக்தி மாரியம்மன் கோவில், எஸ்.வி.ரோடு புதூர் மாரியம்மன் கோவில், வெளிப் பேட்டை தெரு அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் உள்ளிட்ட அனைத்து அம்மன் கோவில்களிலும் வரலட்சுமி விரதத்தை ஒட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
வரலட்சுமி விரதத்தையொட்டி தர்மபுரி சின்னதாயம்மன் நகரில் உள்ள பெரும்பாலான வீடுகளில் பெண்கள் விரதம் இருந்து அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர். இந்த வழிபாட்டில் அந்தந்த பகுதியை சேர்ந்த பெண்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அவர்களுக்கு மஞ்சள், குங்குமம், வளையல், தாலிக்கயிறு மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டன.
அரூர்
அரூர் பழையபேட்டையில் உள்ள சக்தி மாரியம்மன் கோவிலில் நேற்று வரலட்சுமி சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் பெண்கள் பங்கேற்று அம்மனுக்கு தாலி கயிறு, குங்குமம், மஞ்சள், வளையல், பழங்கள் வைத்து சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர். இதில் பங்கேற்றவர்களுக்கு தாலி கயிறு, மஞ்சள், குங்குமம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டன.
இதேபோல் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அம்மன் கோவில்களிலும் வரலட்சுமி விரதத்தையொட்டி சிறப்பு பூஜை நடைபெற்றது.