கேளம்பாக்கம் அருகே, செல்போன்கள் கொள்ளையடித்த வழக்கில் என்ஜினீயர்கள் கைது
கேளம்பாக்கம் அருகே கத்தி முனையில் செல்போன்கள் கொள்ளையடித்த வழக்கில் என்ஜினீயர்கள் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருப்போரூர்,
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அடுத்த கேளம்பாக்கம்- கோவளம் சாலையில் செல்போன் கடை வைத்திருப்பவர் போலேராஜ். கடந்த 8-ந் தேதி இரவு 9 மணியளவில் ஊழியர்களுடன் போலேராஜ் கடையில் வியாபாரம் செய்து வந்தார்.
அப்போது செல்போன் வாங்குவது போல் வந்த 4 பேர் திடீரென பையில் மறைத்து வைத்திருந்த பட்டா கத்தியை எடுத்து கடை உரிமையாளர் போலேராஜ் உள்ளிட்ட 3 பேரையும் அச்சுறுத்தி கடையில் இருந்த ரூ.4 லட்சம் மதிப்புள்ள 20 செல்போன்கள், கல்லாவில் இருந்த ரூ.25 ஆயிரம் போன்றவற்றை கொள்ளையடித்து சென்றனர்.
கொள்ளையடிக்கப்பட்ட இடத்தில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து கேளம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த நிலையில் காஞ்சீபுரம் சரக காவல்துறை தலைவர் சத்திய பிரியா நேரடி பார்வையில் செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் உத்தரவின்பேரில் கேளம்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமாறன் தலைமையில் உதவி சப்-இன்ஸ்பெக்டர்கள் ராஜா, நெடுமாறன், தனசேகர் உள்ளிட்ட 3 தனிப்படை அமைத்து செல்போன் கடையில் பதிவான கண்காணிப்பு கேமரா காட்சி மற்றும் பல்வேறு இடங்களில் பதிவான கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வந்தனர்.
இந்த நிலையில், கேளம்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமாறன் தலைமையில் முட்டுக்காடு சந்திப்பில் வாகன சோதனையில் ஈடுபடும் போது கத்தி முனையில் செல்போன், பணம் கொள்ளையடித்த வழக்கில் தொடர்புடைய 2 பேரை கைது செய்தனர்.
மேலும் அவர்கள் அளித்த தகவலின் பேரில் மேலும் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
விசாரணையில் அவர்கள் பொன்னேரியை சேர்ந்த ஜெகன் என்ற ஜெகதீசன் (வயது 22), ஜெயபிரகாஷ் ( 24), ரஞ்சித்குமார் (24), மணலியை சேர்ந்த விக்கி என்ற விக்னேஷ் ( 24) என்பது தெரியவந்தது. இவர்களில் ஜெகதீசன், ஜெயபிரகாஷ் ஆகியோர் என்ஜினீயர்கள் என்பதும் தெரியவந்தது. கைது செய்யப்பட்ட அவர்களிடம் இருந்து 18 செல்போன்கள், ரூ.4 ஆயிரத்து 500, வீச்சரிவாள், பட்டா கத்தி, கேளம்பாக்கம், முத்தியால்பேட்டை போன்ற இடங்களில் திருடப்பட்ட 5 இருசக்கர வாகனங்கள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டது. போலீசார் அவர்களை செங்கல்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
ரஞ்சித் மற்றும் ஜெயபிரகாஷ் ஆகியோர் மீது 2 கொலை, கொள்ளை, வழிப்பறி, கஞ்சா விற்பனை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன என்பதும், ரஞ்சித் குமார், மற்றும் விக்னேஷ் கொள்ளை, வழிப்பறி, கஞ்சா விற்பனை, மோட்டார் சைக்கிள் திருட்டு உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் சிக்கி கைது செய்யப்பட்டு சிறைக்கு சென்றவர்கள் என்றும் போலீசார் தெரிவித்தனர்.