பாதுகாப்பற்ற முறையில் உடைந்த கண்ணாடிகளை ஏற்றி சென்ற லாரி
வேலூரில் பாதுகாப்பற்ற முறையில் உடைந்த கண்ணாடிகளை ஏற்றிச்சென்ற லாரியை வேலூர் எம்.பி. கதிர்ஆனந்த் மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைத்தார்.
வேலூர்
வேலூரில் பாதுகாப்பற்ற முறையில் உடைந்த கண்ணாடிகளை ஏற்றிச்சென்ற லாரியை வேலூர் எம்.பி. கதிர்ஆனந்த் மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைத்தார்.
உடைந்த கண்ணாடிகள்
வேலூர் கிரீன் சர்க்கிளில் இருந்து கலெக்டர் அலுவலகம் செல்லும் பெங்களூரு- சென்னை தேசிய நெடுஞ்சாலை அணுகுசாலையில் இன்று காலை உடைந்த கண்ணாடிகளை ஏற்றிக்கொண்டு ஆந்திர மாநில பதிவெண் கொண்ட லாரி ஒன்று வேகமாக சென்று கொண்டிருந்தது.
உடைந்த கண்ணாடிகள் தார்பாய் போட்டு மூடப்படாமல் பாதுகாப்பற்ற முறையில் கொண்டு செல்லப்பட்டன.
லாரியின் பின்பக்க தடுப்பு இடைவெளி வழியாக கண்ணாடி துண்டுகள் சாலையில் விழுந்து சிதறின. இதனை திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக அந்த வழியாக காரில் சென்ற வேலூர் எம்.பி. கதிர்ஆனந்த் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதையடுத்து காரில் சிறிதுதூரம் விரட்டி சென்று கலெக்டர் அலுவலகம் அருகே லாரியை மடக்கி நிறுத்தினார்.
லாரி பறிமுதல்
பின்னர் கதிர்ஆனந்த் எம்.பி. இதுகுறித்து சத்துவாச்சாரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் சத்துவாச்சாரி போக்குவரத்து போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர்.
அதில், லாரி டிரைவர் கண்ணமங்கலம் காட்டுக்காநல்லூரை சேர்ந்த மனோகரன் (வயது 59) என்பதும், பெங்களூருவில் இருந்து உடைந்த கண்ணாடிகளை காஞ்சீபுரத்தில் உள்ள ஒரு நிறுவனத்துக்கு கொண்டு செல்வதாக தெரிவித்தார்.
போக்குவரத்து விதிகளை பின்பற்றாமல் பாதுகாப்பற்ற முறையில் உடைந்த கண்ணாடிகளை ஏற்றி வந்த டிரைவரை கடுமையாக போலீசார் எச்சரித்தனர்.
பின்னர் லாரியை பறிமுதல் செய்து சத்துவாச்சாரி போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.
பாதுகாப்பற்ற முறையில் கண்ணாடி துண்டுகளை ஏற்றிச்சென்ற லாரியை கதிர்ஆனந்த் எம்.பி. மடக்கி பிடித்த சம்பவம் வேலூரில் பரபரப்பை ஏற்படுத்தியது.
---------