கும்மிடிப்பூண்டி அருகே டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி போராட்டம்
கும்மிடிப்பூண்டி அருகே கிராம மக்களுக்கு இடையூறாக உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கும்மிடிப்பூண்டி,
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கம் அருகே உள்ளது நொச்சிக்குப்பம் என்ற மீனவ கிராமம். இந்த கிராமத்தில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர்.
இங்கு அரசு பள்ளி, கோவில் மற்றும் விளையாட்டு மைதானத்தை ஒட்டி டாஸ்மாக் கடை உள்ளது. கடந்த 4 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் இந்த டாஸ்மாக் கடையையொட்டிய பாதை வழியாகத்தான் பெண்கள், பள்ளி மாணவர்கள், சிறுவர்கள் தினந்தோறும் அத்தியாவசிய தேவைகளுக்கு சென்று வருகின்றனர்.
கிராம மக்களுக்கு இடையூறாக இருந்து வரும் மேற்கண்ட டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி அந்த பகுதி மக்கள் சார்பாக மாவட்ட நிர்வாகம் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகளுக்கு தொடர்ந்து பலமுறை மனுக்கள் அளிக்கப்பட்டன. ஆனால் பலன் ஏதுமில்லை.
இந்த நிலையில், டாஸ்மாக் கடையை அகற்ற வலியுறுத்தி அதன் அருகே உள்ள காலி மைதானத்தில் நேற்று கிராம மக்கள் தரையில் அமர்ந்து முற்றுகையிட்டு திடீர் போராட்டம் நடத்தினர். பின்னர் கிராம மக்கள் ஒன்றாக இணைந்து இடையூறாக உள்ள டாஸ்மாக் கடையை உடனே அகற்றக்கோரி கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் கிராம மக்கள் 200- க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர்.
தகவலறிந்து அங்கு வந்த கும்மிடிப்பூண்டி தாசில்தார் மகேஷ் தலைமையிலான வருவாய்த்துறையினர் மற்றும் ஆரம்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அய்யனாரப்பன் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது டாஸ்மாக் கடையை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டதால் கிராம மக்கள் தங்களது 1 மணி நேர முற்றுகை போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.