திருவள்ளூர் அருகே கடன் வாங்கி தருவதாக பெண்ணிடம் மோசடி; வாலிபர் கைது
திருவள்ளூர் அருகே கடன் வாங்கி தருவதாக பெண்ணிடம் மோசடியில் ஈடுபட்ட வாலிபர் கைது செய்யப்பட்டார்.
திருவள்ளூர்,
திருவள்ளூரை அடுத்த ஈக்காடு புன்னப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் முனுசாமி. இவரது மனைவி கலா (வயது 48). கடந்த சில நாட்களுக்கு முன்னர் கலாவை செல்போனில் அழைத்த நபர் உங்களுக்கு பைனான்ஸ் நிறுவனம் மூலம் ரூ.10 லட்சம் கடன் வாங்கி தருகிறேன் என்று கூறி உள்ளார். இதை உண்மை என்று நம்பிய கலா அந்த நபரிடம் பேசி ரூ.10 லட்சம் பெறுவதற்காக ஆதார் கார்டு, பான் கார்டு போன்ற ஆவணங்களை கொடுத்தார்.
ஆவணங்களை பெற்று கொண்ட நபர் உங்களுக்கு ரூ.10 லட்சம் கடன் தர வேண்டுமானால் அதற்கு முதலில் ரூ.19 ஆயிரத்து 195 செலுத்த வேண்டும் என்று கூறி உள்ளார்.
அந்த நபர் தெரிவித்தது போல் மேற்கண்ட பணத்தை அவரது வங்கி கணக்குக்கு அனுப்பி வைத்தார். பணத்தை பெற்று கொண்டவுடன் அவர் எந்த பதிலும் சொல்லாமல் போனை சுவிட்ச் ஆப் செய்துவிட்டார். பலமுறை தொடர்பு கொண்டும் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை.
இதனால் ஏமாற்றப்பட்ட கலா இது தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் வருண்குமாரிடம் புகார் அளித்தார். அவரது உத்தரவின் பேரில் திருவள்ளூர் சைபர் கிரைம் சப்-இன்ஸ்பெக்டர் மனோஜ் பிரபாகர்தாஸ் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்தனர்.
விசாரணையில் பெண்ணிடம் கடன் வாங்கி தருவதாக மோசடியில் ஈடுபட்ட நபர் சென்னை சாலிகிராமத்தை சேர்ந்த பாரத் (வயது 28) என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் நேற்று அவரை கைது செய்து திருவள்ளூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி திருவள்ளூர் கிளை சிறையில் அடைத்தனர். மேலும் அவரிடம் இருந்து ஒரு மடிக்கணினியை போலீசார் கைப்பற்றினார். போலீசார் அவரிடம் விசாரித்து வருகின்றனர். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பாரத் சென்னையில் ஒரு பெண்ணிடம் கடன் வாங்கி தருவதாக மோசடி செய்து மதுரவாயல் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறை சென்று வெளியே வந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் இவர் 50-க்கும் மேற்பட்டோரிடம் கடன் வாங்கி தருவதாக மோசடியில் ஈடுபட்டு ரூ.15 லட்சம் வரை மோசடி செய்துள்ளார் என்பதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.