அங்கன்வாடி கட்ட எதிர்ப்பு தெரிவித்தவர்களை கண்டித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
திருமங்கலம் அருகே அரசு இடத்தில் அங்கன்வாடி கட்டிடம் கட்ட எதிர்ப்பு தெரிவித்த நபர்களை கண்டித்து பொதுமக்கள் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருமங்கலம்,
திருமங்கலம் அருகே அரசு இடத்தில் அங்கன்வாடி கட்டிடம் கட்ட எதிர்ப்பு தெரிவித்த நபர்களை கண்டித்து பொதுமக்கள் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அனுமதி
திருமங்கலம் அருகே விடத்தக்குளம் ஊராட்சிக்கு உட்பட்டது எட்டு நாலி புதூர் கிராமம். இந்த கிராமத்தில் அரசுக்கு சொந்தமான 1 ஏக்கர் 80 சென்ட் இடம் உள்ளது. இந்த இடத்தில் தண்ணீர் தொட்டி, சிமெண்ட் கலம், போர்வெல் ஆகியவை போடப்பட்டு கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். மீதம் உள்ள இடத்தில் அங்கன்வாடி மையக் கட்டிடம் கட்ட அரசு அனுமதி அளித்துள்ளது.
வாடகை கட்டிடத்தில் இயங்கி வந்த அங்கன்வாடி மைய கட்டிடம் அரசு வழங்கிய நிதி ரூ.10 லட்சத்தில் கடந்த மாதம் கட்டிடம் கட்டும் பணி தொடங்கியது. இந்த இடத்திற்கு அருகே தனியாருக்கு சொந்தமான இடம் உள்ளது. தனியார் நிலத்திற்கு சொந்தமானவர்கள் அங்கன்வாடி கட்டிடம் கட்ட பல்வேறு வகைகளில் இடையூறு செய்து வருவதாக கிராம பொதுமக்கள் தெரிவித்தனர்.
இதனால் அங்கன்வாடி கட்டிட பணி பாதி முடிந்த நிலையில் உள்ளது. அத்துடன் தனியாருக்கு சொந்தமான லாரியில் இருந்த பொருட்கள் திருடப்பட்டதாக திருமங்கலம் தாலுகா போலீசாரிடம் பொய்யான புகார் செய்யப்பட்டு உள்ளதாகவும் கூறினர். அந்த கிராமத்தை சேர்ந்தவர்கள் இறந்த நபர்களை கொண்டு செல்லும் மயான பாதையையும் முட்கள் போட்டு மூடி வைக்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து தனிநபர் ஒருவர் குடும்பத்துடன் சேர்ந்து கிராமத்தில் உள்ள பல்வேறு வளர்ச்சிப் பணிகளுக்கு முட்டுக்கட்டையாக இருப்பதாகவும் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.
ஆர்ப்பாட்டம்
அத்துடன் அங்கன்வாடி கட்டிட பணிகளை தொடரவும், சுடுகாட்டுக்கு செல்லும் பாதையில் அடைப்பு உள்ள முட்களை அகற்ற வேண்டும் என கோரி திருமங்கலம் தாசில்தார் அலுவலகம் முன்பு நூற்றுக்கும் மேற்பட்டோர் ஒன்று திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் பேசிய வட்டாட்சியர் அனந்தகிருஷ்ணன் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.