சேலத்தில் சாவிலும் இணைபிரியாத தம்பதி: கணவர் இறந்த துக்கத்தில் மனைவி தற்கொலை ஏற்கனவே 4 பிள்ளைகளை இழந்து தவித்த பரிதாபம்

சேலத்தில் கணவர் இறந்த துக்கத்தில் மனைவி தற்கொலை செய்து கொண்டார். சாவிலும் இணை பிரியாத இந்த தம்பதி, ஏற்கனவே 4 பிள்ளைகளை இழந்து தவித்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

Update: 2021-08-19 21:07 GMT
சூரமங்கலம்
பால் வியாபாரம்
சேலம் சூரமங்கலம் அருகே வெள்ளைகவுண்டர் பகுதியை சேர்ந்தவர் பெரியண்ணன் (வயது 95), ஆரம்ப காலத்தில் பால் வியாபாரம் செய்து வந்தார். அவருடைய மனைவி அன்னம்மாள் (85).
இதற்கிடையே பெரியண்ணன் வயது மூப்பு காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டு படுத்த படுக்கையாய் இருந்தார். அவரை அன்னம்மாள் உடன் இருந்து கவனித்து வந்தார்.
கணவர் சாவு
இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு உடல்நலக்குறைவால் பெரியண்ணன் திடீரென இறந்தார். அருகில் இருந்து கவனித்து வந்த அன்னம்மாள் செய்வதறியாது திகைத்தார்.
கணவரது உடலை பார்த்து கதறி அழுதார். திருமணம் ஆகி சுமார் 70 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்த பெரியண்ணனின் பிரிவு அன்னம்மாளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.
தற்கொலை
இதனால் சிலமணி நேரத்தில் வீட்டுக்குள் சென்று விட்டத்தில் சேலையால் தூக்குப்போட்டு அவர் தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது. வழக்கமாக அதிகாலையிலேயே எழுந்து வீட்டு வேலைகளை அன்னம்மாள் செய்வது வழக்கம். நேற்று காலையில் அன்னம்மாள் வீட்டுக்கதவு திறக்கப்படாததை கண்டு அக்கம் பக்கத்தினர் அங்கு சென்றனர்.
அங்கு பெரியண்ணன் ஒரு பக்கம் பிணமாகவும், அன்னம்மாள் ஒரு பக்கம் தூக்கில் தொங்கியதையும் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து சூரமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 
போலீஸ் விசாரணை
அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் சேகர், உலகநாதன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அன்னம்மாள் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையே  பெரியண்ணன் உடலை உறவினர்கள் அதே பகுதியில் உள்ள சுடுகாட்டில் அடக்கம் செய்தனர். பிரேத பரிசோதனைக்கு பிறகு அன்னம்மாள் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
உருக்கமான தகவல்கள்
இதற்கிடையே அன்னம்மாள் தற்கொலை தொடர்பாக அக்கம் பக்கத்தினர் மற்றும் உறவினர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில் உருக்கமான தகவல்கள் வெளியாயின. அதன் விவரம் வருமாறு:-
பெரியண்ணன்- அன்னம்மாள் தம்பதிக்கு கணேசன், சுந்தரம், ராமு என்ற 3 மகன்களும், செல்வி என்ற ஒரு மகளும் இருந்தனர். இதில் கணேசன், சுந்தரத்துக்கு மட்டுமே திருமணம் ஆனது. மற்றவர்களுக்கு ஆகவில்லை. கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு ராமு, செல்வி ஆகிய இருவரும் நோய்வாய்ப்பட்டு இறந்துள்ளனர். 10 ஆண்டுகளுக்கு முன்பு சுந்தரம் இறந்துள்ளார்.
7 ஆண்டுகளாக கவனிப்பு
கடந்த 7 ஆண்டுகளாக பெரியண்ணன் நடமாட்டம் இல்லாமல் படுத்த படுக்கையாக இருந்துள்ளார். அவரை அன்னம்மாள் உடன் இருந்து கவனித்து வந்துள்ளார். இதற்கிடையே கடந்த ஜனவரி மாதம் மூத்த மகன் கணேசன் ரெயிலில் அடிபட்டு இறந்துள்ளார்.
ஏற்கனவே 3 பிள்ளைகளை இழந்த இந்த தம்பதிக்கு, மூத்த மகன் கணேசனும் இறந்தது பெரும் அதிர்ச்சியை தந்தது. அதன்பிறகு பெரியண்ணன் மிகுந்த கவலையில் இருந்துள்ளார். அவருக்கு அன்னம்மாள் ஆறுதலாக இருந்தார்.
உயிரை விட முடிவு
இந்த நிலையில் பெரியண்ணன் இறந்தது அன்னம்மாளை அதிகமாக பாதித்தது. 4 பிள்ளைகளை இழந்து விட்டோம். இப்போது நமக்கென்று இருந்த கணவரும் இந்த உலகை விட்டு போய் விட்டார். இனி நாம் யாருக்காக வாழ வேண்டும் என்ற எண்ணத்தில் அன்னம்மாள் தற்கொலை முடிவை எடுத்ததாக தெரிகிறது.

மேலும் செய்திகள்