காங்கிரஸ் முன்னாள் மந்திரி வினய் குல்கர்னி இன்று விடுதலை

சாட்சிகளை நாசப்படுத்திய வழக்கிலும் காங்கிரஸ் முன்னாள் மந்திரி வினய் குல்கர்னிக்கு ஜாமீன் கிடைத்தது. இதனால் 9 மாதத்திற்கு பிறகு சிறையில் இருந்து அவர் விடுதலை ஆகிறார்.

Update: 2021-08-19 20:33 GMT
பெங்களூரு:

காங். முன்னாள் மந்திரி

  தார்வாரில் பா.ஜனதாவை சேர்ந்த மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர் யோகேஷ்கவுடா கடந்த 2016-ம் ஆண்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு குறித்து விசாரணை நடத்திய தார்வார் உபநகர் போலீசார், யோகேஷ்கவுடா கொலையின் பின்னணியில் நில பிரச்சினை இருப்பதாக காரணம் கூறினர்.

  இந்த சம்பவத்தில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் மந்திரி வினய் குல்கர்னிக்கு தொடர்பு இருப்பதாகவும், தேர்தல் முன்விரோத்தில் இந்த கொலை நடந்திருப்பதாகவும் பா.ஜனதா தலைவர்கள் குற்றம்சாட்டினர். பின்னர் இந்த வழக்கு சி.பி.ஐ. வசம் ஒப்படைக்கப்பட்டது.

நிபந்தனை ஜாமீன்

  சி.பி.ஐ. போலீசார், கடந்த 2020-ம் ஆண்டு நவம்பர் மாதம் 5-ந்தேதி முன்னாள் மந்திரி வினய் குல்கர்னியை கைது செய்து பெலகாவியில் உள்ள இன்டல்கா சிறையில் அடைத்தனர். யோகேஷ் கவுடா கொலையில் அரசியல் நோக்கம் இருப்பதாக அந்த அதிகாரிகள் கூறினர். 

கடந்த சில நாட்களுக்கு முன்பு அவருக்கு சுப்ரீம் கோர்ட்டு நிபந்தனை ஜாமீன் வழங்கியது. அதாவது அவரது சொந்த ஊரான தார்வாரில் தங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆயினும் அவர் மீது சாட்சிகளை நாசப்படுத்திய வழக்கு நிலுவையில் இருந்ததால், அவரை சிறையில் இருந்து விடுதலை செய்யவில்லை.

இன்று விடுதலை ஆகிறார்

  இந்த நிலையில் பெங்களூருவில் உள்ள மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு கோர்ட்டு, வினய் குல்கர்னி சாட்சிகளை நாசப்படுத்திய வழக்கில் ஜாமீன் வழங்கி நேற்று உத்தரவிட்டது. இதையடுத்து வினய் குல்கர்னி இன்று (வெள்ளிக்கிழமை) இன்டல்கா சிறையில் இருந்து விடுதலை செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  அவர் 9 மாத சிறை வாசத்திற்கு பிறகு வெளியே வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. சித்தராமையா மந்திரிசபையில் அவர் மந்திரியாக பணியாற்றினார். தார்வார் பகுதியில் காங்கிரசின் பலம் வாய்ந்த தலைவராக கருதப்பட்ட அவர், கடந்த 2018-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் தார்வார் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்