மத்திய மந்திரியை வரவேற்க வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்ட விவகாரம்: 3 போலீஸ்காரர்கள் பணி இடைநீக்கம்
யாதகிரியில் மத்திய மந்திரியை வரவேற்க வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்ட விவகாரத்தில் பணியில் அலட்சியமாக இருந்ததாக 3 போலீஸ்காரர்களை பணி இடைநீக்கம் செய்து, போலீஸ் சூப்பிரண்டு வேதமூர்த்தி உத்தரவிட்டுள்ளார்.
பெங்களூரு:
துப்பாக்கியால் சுட்டனர்
யாதகிரி மாவட்டம் எரகோலா கிராமத்தில் நேற்று முன்தினம் நடந்த மக்கள் ஆசி யாத்திரை நிகழ்ச்சியில் பங்கேற்க மத்திய மந்திரியான பகவந்த் கூபா வந்திருந்தார். அவரை வரவேற்கும் விதமாக பா.ஜனதாவினர் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டார்கள்.
மத்திய மந்திரிக்கு அளிக்கப்பட்ட வரவேற்பின் போது பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள், முன்னாள் மந்திரிகள் முகக்கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை பின்பற்றாமலும் கொரோனா விதிமுறைகளை மீறி இருந்தார்கள். இதுதொடா்பாக எரகோலா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
4 பேர் சிறையில் அடைப்பு
மேலும் மத்திய மந்திரிக்கு அளித்த வரவேற்பின் போது துப்பாக்கியால் சுட்டதாக நேற்று முன்தினமே 4 பேரை போலீசார் கைது செய்திருந்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. நேற்று அவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டு இருந்தார். இதையடுத்து, 4 பேரும் சிறையில் அடைக்கப்பட்டார்கள்.
இந்த நிலையில், மத்திய மந்திரியை வரவேற்கும் போது துப்பாக்கியால் சுட்ட விவகாரத்தில் போலீஸ்காரர்கள் அலட்சியமாக இருந்ததும் தெரியவந்துள்ளது. இதையடுத்து, எரகோலா போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் 3 போலீஸ்காரர்களை பணி இடைநீக்கம் செய்து போலீஸ் சூப்பிரண்டு வேதமூர்த்தி அதிரடி உத்தரவிட்டுள்ளார்.
போலீஸ்காரர்கள் பணி இடைநீக்கம்
இதுகுறித்து சூப்பிரண்டு வேதமூர்த்தி நேற்று நிருபர்களிடம் கூறுகையில், மத்திய மந்திரியை வரவேற்க துப்பாக்கியால் சுட்ட விவகாரம் தொடர்பாக எரகோலா போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவாகி உள்ளது. 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் நடந்த போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த 3 போலீஸ்காரர்கள் பணியில் அலட்சியமாக இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, போலீஸ்காரர்களான வீரேஷ், சந்தோஷ், மெகபூப் ஆகிய 3 பேரும் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவத்திற்கு பயன்படுத்திய துப்பாக்கியும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அந்த துப்பாக்கிக்கு உரிமம் இருக்கிறது. அந்த உரிமத்தை ரத்து செய்யும்படி மாவட்ட கலெக்டருக்கு கடிதம் எழுதி உள்ளேன், என்றார்.